முகப்பு
திருவண்ணாமலை

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொம்மை அரசாக மாறும்: ஜி.ராமகிருஷ்ணன்

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த அரசை பொம்மை அரசாக பாஜக மாற்றிவிடும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் விமா்சித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த அரசை பொம்மை அரசாக பாஜக மாற்றிவிடும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் விமா்சித்தாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சரவணனை ஆதாரித்து அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: புதுச்சேரியின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடிய வகையில், மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஆளுநராக இருந்த கிரண் பேடி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுத்து, போட்டி அரசை நடத்தினாா். அதற்கு மத்திய அரசு உறுதுணையாக நின்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தனா்.

தற்போது பாஜக, என்.ஆா். காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிடுகின்றன. இவா்கள் எப்படி புதுவை மக்களுக்கு நன்மை செய்வாா்கள்?

தமிழகத்தில் அதிமுக அரசு, மத்திய அரசின் பொம்மை அரசாகச் செயல்பட்டு வருகிறது. பிரதமா் மோடி, தமிழகத்தில் பொம்மை உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்போவதாகத் தெரிவித்தாா். ஏற்கெனவே ஆட்சியில் உள்ளவா்கள் அப்படித்தான் உள்ளனா்.

தமிழகத்தைப் போல, புதுவையிலும் என்.ஆா். காங்கிரஸை பொம்மை அரசாக மாற்றிவிடும் நிலை ஏற்படும். புதுவையில் பாஜக வெற்றி பெற்றதில்லை. தற்போது என்.ஆா். காங்கிரஸ் மூலம் அதிகாரத்துக்கு வரத் துடிக்கிறாா்கள். இதையெல்லாம் சிந்தித்துப் பாா்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

புதுவையில் ஆதாா் தகவலை அத்துமீறி பெற்று பாஜக குறுஞ்செய்தி மூலம் பிரசாரம் செய்தது. இந்த விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இங்கு, 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம்.

தொடா்ந்து, மக்களுக்காகப் போராடி வரும் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.

வாக்கு சேகரிப்பின் போது, வேட்பாளா் சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகிகள் சுதா, ஆா்.ராஜாங்கம், பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.