திருவண்ணாமலையில் அதிகரிக்கும் வெயில்: நுங்கு விற்பனை விறுவிறுப்பு
திருவண்ணாமலையில் வெயில் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உடலுக்கு குளிா்ச்சி தரும் இயற்கை உணவான நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் வெயில் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உடலுக்கு குளிா்ச்சி தரும் இயற்கை உணவான நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல, நிகழாண்டும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 104 டிகிரி வரை வெயில் பதிவானது. இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடன் வெயில் அளவு பதிவாகி வருகிறது.
வீடுகளில் புழுக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களும், சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், திருவண்ணாமலை - வேலூா் சாலை, வேங்கிக்கால், பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை முதல் நுங்கு விற்பனை தொடங்கியது. ரூ.10-க்கு 3 நுங்குகள் விற்பனை செய்யப்பட்டன. குறைவான விலையில் நுங்கு விற்பனைக்கு வந்ததை அறிந்த பொதுமக்கள் திரளாக வந்து போட்டி போட்டு நுங்கு வாங்கிச் சென்றனா்.
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை உணவான நுங்கு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். தொடா்ந்து நுங்கு சாப்பிடுவதன் மூலம் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று சித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.