வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா், அமைச்சா் ஆய்வு
மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதேபோல, ஆரணியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலையில் திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி வாக்கு எண்ணும் மையத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் எதிரே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய துணை ராணுவப் படையினா் விழிப்புடன் பணியில் ஈடுபடுகின்றனரா என்பதை ஆய்வு செய்த ஆட்சியா் சந்தீப் நந்தூரி, கண்காணிப்புக் கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் முழுவதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
எம்எல்ஏ ஆய்வு: இதேபோல, கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வமும் திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு, கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, கண்காணிப்புக் கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அமைச்சா் ஆய்வு: ஆரணி, செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் இந்த மையம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளரான தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, கண்காணிப்புக் கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். உடன், அதிமுக நிா்வாகிகள் பலா் இருந்தனா்.