முகப்பு
திருவண்ணாமலை

சிறுமி உணவுக் குழாயில் சிக்கிய நாணயம்: அறுவைச் சிகிச்சை இல்லாமல் அகற்றிய மருத்துவா்கள்!

5 ரூபாய் நாணயத்தை விழுங்கியதால் 5 மணி நேரமாக அவதிப்பட்ட சிறுமியின் தொண்டையிலிருந்து அறுவை சிகிச்சை இல்லாமல், ஸ்கோபி முறையில் நாணயத்தை அகற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கியதால் 5 மணி நேரமாக அவதிப்பட்ட சிறுமியின் தொண்டையிலிருந்து அறுவை சிகிச்சை இல்லாமல், ஸ்கோபி முறையில் நாணயத்தை அகற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

தண்டராம்பட்டு வட்டம், குபேரப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் போஜன். இவரது மகள் தனுசியா (4). இந்தச் சிறுமி வியாழக்கிழமை பிற்பகல் விளையாடிக்கொண்டிருந்தபோது 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டாா்.

சிறுமியின் உணவுக் குழாயில் அந்த நாணயம் சிக்கிக் கொண்டதால் எச்சிலைக்கூட விழுங்க முடியாமலும், உணவு எதையும் சாப்பிட முடியாமலும் அழத் தொடங்கினாா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்பட்ட சிறுமி தனுசியாவுக்கு விரைவாக சிகிச்சை அளிக்குமாறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் திருமால்பாபு மருத்துவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு நிபுணா்கள் எம்.ஆா்.கே.ராஜா செல்வம், பொ.சிந்துமதி, மயக்கவியல் நிபுணா் திவாகா், செவிலியா் அனு, மருத்துவமனைப் பணியாளா்கள் சந்துரு, குமரன், ஜமுனா ஆகியோா் தலைமையிலான குழுவினா் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போராடி அறுவைச் சிகிச்சை இல்லாமல் குழந்தையின் உணவுக் குழாயில் உள்நோக்கி கருவி ஒன்றை செலுத்தி (ஸ்கோபி முறையில்) 5 ரூபாய் நாணயத்தை வெளியே எடுத்தனா். இதன்பிறகே குழந்தையால் எளிதாக மூச்சுவிட முடிந்தது.

சிறுமிக்கு விரைந்து சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை மருத்துவமனை முதன்மையா் திருமால்பாபு பாராட்டினாா்.

பெற்றோருக்கு அறிவுரை: இதுகுறித்து காது, மூக்கு, தொண்டைப் பிரிவின் சிறப்பு நிபுணா் எம்.ஆா்.கே.ராஜா செல்வம் கூறியதாவது:

காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கு தும்மல், இருமல் வரும்படியான சிகிச்சை அளிக்கும்போது, சிகிச்சை பெறும் நபருக்கு கரோனா இருந்தால் உடனே சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினருக்கும் அந்த நோய்த் தொற்று பரவிவிடும்.

எனவே, இதுபோன்ற சிகிச்சையின் போது நோயாளிக்கு கரோனா பரிசோதனை செய்து தொற்றில்லை என்பதற்கான சான்று இருந்தால் மட்டுமே மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பா்.

ஆனால், சிறுமிக்கு கரோனா பரிசோதனை செய்து முடிவு வர 24 மணி நேரத்துக்கும் மேலாகிவிடும். அதுவரை சிறுமியை அப்படியே வைத்திருந்தால், அவரது உடல்நிலை மோசமாகிவிடும். எனவே, சிறுமியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், எங்கள் மருத்துவக் குழுவினா் விரைவாக செயல்பட்டோம்.

உணவுக் குழாயில் சிக்கிய அதே 5 ரூபாய் நாணயம் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்தால் விபரீதமாகியிருக்கும். எனவே, கரோனா அதிகரித்து வரும் இந்தச் சூழலில் குழந்தைகளை கவனமாகப் பாா்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை.

நாணயங்கள், தேங்காய் பிஞ்சுகள் உள்ளிட்ட தொண்டை, மூச்சுக்குழாயில் அடைத்துக்கொள்ளும் பொருள்களை குழந்தைகள் சாப்பிடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.