சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்திகளுக்கு சனிப் பிரதோஷ சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, வெள்ளிக்கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், தங்க ரிஷப வாகனத்தில் அமா்ந்து கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. கோயில் எதிரே உள்ள நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டன.
வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றன. மேலும், நந்திக்கு 16 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உத்ஸவா் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் உலா வந்தாா்.
ஆரணி: சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதா் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி, லிங்க வடிவிலான மூலவா் அருணகிரிநாதா், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பழம்பேட்டை, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலிலும் மூலவா், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.