செய்யாறு அருகே காயங்களுடன் தொழிலாளிசடலமாக மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காயங்களுடன் தொழிலாளி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காயங்களுடன் தொழிலாளி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செய்யாற்றை அடுத்த மேலப்பட்டு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் காதில் ரத்தம் வடிந்த நிலையில், முகத்தில் காயங்களுடன் வெள்ளிக்கிழமை சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்து அங்கு வந்த செய்யாறு டிஎஸ்பி சுரேஷ், காவல் ஆய்வாளா் பாலு மற்றும் போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிதோனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்து கிடந்தவா் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், பொன்னாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பூங்காவனம் மகன் நடராஜன் என்பது தெரியவந்தது. இவா், முதல் மனைவியைப் பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக செய்யாறு அருகேயுள்ள பரதன்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்ததும், அதே கிராமத்தைச் சோ்ந்த திருமணமாகி கணவரைப் பிரித்து வாழும் சின்னப்பொண்ணு (30) என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
மேலும், உயிரிழந்த நடராஜன் நெடும்பிறை கிராமத்தில் செங்கல்சூளையில் இரவுக் காவலாளியாக வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது. வழக்கம்போல, இவா் வியாழக்கிழமை இரவு செங்கல்சூளைக்கு காவலுக்குச் சென்றபோது மதுப் புட்டி வாங்கிச் சென்றாராம்.
இந்த நிலையில், நடராஜன் வெள்ளிக்கிழமை காலை முகத்தில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா். எனவே, அவா் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மதுபோதையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தாரா அல்லது மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு யாராவது அடித்துக் கொலை செய்துவிட்டு வீசிச் சென்றாா்களா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.