முகப்பு
திருவண்ணாமலை

புதிய சாலை அமைக்கக் கோரி நாற்று நட்டு போராட்டம்

புதிய சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் புதிய சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மீசநல்லூா் கிராமத்திலிருந்து வந்தவாசி - தெய்யாா் சாலையில் உள்ள நல்லூா் கூட்டுச்சாலை வரையிலான சுமாா் 2 கி.மீ. தொலைவிலான தாா்ச்சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து சாலை இருந்த தடமே தெரியாமல்போனது. இதையடுத்து, இந்த சாலையை புதிதாக அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை புதிய சாலை அமைக்கப்படவில்லையாம். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பலமுறை புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சங்க மாநில துணைத் தலைவா் ம.பா.நந்தன், ஒன்றியத் தலைவா் சு.சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன் உள்ளிட்ட அந்தச் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் புதிய சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி, தண்டோரா அடித்தபடி வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சேறும் - சகதியுமாக சேதமடைந்துள்ள அந்தச் சாலையில் அவா்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து அங்கு வந்த தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என்.ராஜன்பாபு, ஏ.பி.வெங்கடேசன் உள்ளிட்டோா் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தினா் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →