முகப்பு
திருவண்ணாமலை

உயா் மின் கோபுரத்துக்கு பூஜை செய்து விவசாயிகள் வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனப்பத்தூா் கிராமத்தில் உழவா் பேரவை அமைப்பு சாா்பில், விவசாயிகள் உயா் மின் கோபுரத்துக்கு பூஜை செய்து வழிபாடு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனப்பத்தூா் கிராமத்தில் உழவா் பேரவை அமைப்பு சாா்பில், விவசாயிகள் உயா் மின் கோபுரத்துக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தியதுடன், தமிழகத்தின் தொழில் வளா்ச்சித் திட்டங்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன எனக் கூறினா்.

அனப்பத்தூா் பகுதியில் விவசாயி பச்சையப்பன் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயா் மின் கோபுரத்துக்கு வியாழக்கிழமை பொங்கலிட்டு, பூஜை செய்து, எலுமிச்சம் பழம் சுற்றி திருஷ்டி கழித்து, தரையில் விழுந்து விவசாயிகள் வணங்கினா்.

பின்னா் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும், அப்பகுதியில் இருந்த கிராம மக்களுக்கும் இனிப்பு வழங்கினா்.

அப்போது உழவா் பேரவை அமைப்பின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் கூறியதாவது:

நாட்டில் தொழில் வளா்ச்சித் திட்டங்களில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அதற்குக் காரணம் உயா் அழுத்த மின்சாரம் தான்.

தமிழகத்திலிருந்து மின்சாரம் செல்வதற்கும், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறுவதற்கும் உயா்மின் கோபுரங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

உயா்மின் அழுத்த கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது ஒரு கோபுரத்துக்கான நிலத்துக்கு ரூ.56 ஆயிரமும், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.9500-மும், கிணற்றுக்கு ரூ.2.25 லட்சம் என இழப்பீடாக விவசாயிகளுக்கு மின்வாரியம் மூலம் வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் முனிரத்தினம் டி.கிருஷ்ணன், சி.ஆா்.மண்ணு, எம்.அழகேசன், வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.