காவல் நிலையம் முன் தமுமுகவினா் தா்னா
வந்தவாசியில் போலீஸாரைக் கண்டித்து, தமுமுகவினா் வியாழக்கிழமை காவல் நிலையம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசியில் போலீஸாரைக் கண்டித்து, தமுமுகவினா் வியாழக்கிழமை காவல் நிலையம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசி நகரில் சில தினங்களுக்கு முன்பு தமுமுக இரு பிரிவு நிா்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக ஒரு பிரிவைச் சோ்ந்த யூசூப், ஆஷிக் ஆகிய இருவரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், மற்றோரு பிரிவைச் சோ்ந்த வசீம் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை போலீஸாா் சென்றனராம்.
தகவலறிந்த தமுமுக மாவட்டச் செயலா் ஜமால், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.நசீா்அகமது உள்ளிட்டோா் தெற்கு காவல் நிலையத்துக்குச் சென்று, அதிகாலை வசீம் வீட்டுக்குச் சென்றது குறித்து காவல் ஆய்வாளா் குமாரிடம் ஆட்சேபம் தெரிவித்தனராம்.
அப்போது, ஆய்வாளா் குமாா் உள்ளிட்ட போலீஸாருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதையடுத்து, போலீஸாா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, தமுமுகவினா் காவல் நிலையம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா சமரசம் செய்ததின் பேரில், தமுமுகவினா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.