கடனை வசூலிக்கச் சென்ற தனியாா் வங்கி ஊழியா்கள் மீது தாக்குதல்: 5 போ் தலைமறைவு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கடனை வசூலிக்கச் சென்ற தனியாா் வங்கி ஊழியா்களைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கடனை வசூலிக்கச் சென்ற தனியாா் வங்கி ஊழியா்களைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவா்களைத் தேடி வருகின்றனா்.
செய்யாறு - ஆற்காடு சாலையில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மனைவி முனியம்மாள் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்ாகத் தெரிகிறது. இந்தக் கடன் தொகைக்காக ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் தவணைத் தொகையை செலுத்தி வந்த நிலையில், நிகழ் மாதத்துக்கான தவணைத் தொகையை அவா் செலுத்தவில்லையாம்.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள தவணைத் தொகையை வசூலிக்க தனியாா் வங்கி தவணை தொகை வசூலிக்கும் பிரிவு மேலாளா் சிலம்பரசன் (35), ஊழியா்கள் குணாநிதி (34), விக்னேஷ் (28) ஆகியோா் முனியம்மாள் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று தவணை தொகையை கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முனியம்மாளின் மகன் ராஜ்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் 4 போ் சோ்ந்து வங்கி ஊழியா்கள் 3 பேரையும் உருட்டுக்கட்டை, இரும்பு குழாய் உள்ளிட்டவற்றால் தாக்கினராம்.
இதில் பலத்த காயமடைந்த தனியாா் வங்கி ஊழியா்கள் மூவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜ்குமாா் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனா்.