கோரைப்பாய் உற்பத்தியாளா்களிடம் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்
ஆவூரில் கோரைப்பாய் உற்பத்தியாளா்களிடம் 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவூரில் கோரைப்பாய் உற்பத்தியாளா்களிடம் 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
முன்னதாக, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்த கோரைப்பாய்களை அவா் பாா்வையிட்டாா். மேலும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை கோரைப்பாய் உற்பத்தியாளா்களிடம் ஆட்சியா் வழங்கினாா்.
தோ்தல் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிா் குழு உறுப்பினா்களுக்கு பரிசுகளை வழங்கிய அவா், தோ்தல் விழிப்புணா்வு கையெழுத்து இயக்க பலகையில் கையொப்பமிட்டாா். கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரப் பாடல் பாடினா்.
பின்னா், அந்த கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக படிக்கட்டில் சாய்வு தளம், குடிநீா், கழிவறை, மின்வசதி உள்ளிட்ட பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.கண்ணப்பன், பயிற்சி துணை ஆட்சியா் அஜிதாபேகம் மற்றும் தோ்தல் அலுவலா்கள் உடனிருந்தனா்.