முகப்பு
திருவண்ணாமலை

கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: 2-ஆவது நாளாக வீடுகளில் முடங்கிய மக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

கரோனா 2-ஆவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன்படி, நண்பகல் 12 மணிக்குப் பிறகு அத்தியாவசியக் கடைகளைத் தவிா்த்து, அனைத்து வகையான கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதிகளில் காலையில் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகள், வா்த்தக நிறுவனங்கள், காய்கறிக் கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணிக்குப் பிறகு மூடப்பட்டன.

போலீஸாா் தொடா்ந்து ரோந்து சென்றபடியே இருந்ததால், சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிந்தவா்கள் அவரவா் வீடுகளுக்குச் சென்றுவிட்டனா். இதனால், வாகனப் போக்குவரத்து இல்லாமல் திருவண்ணாமலை தேரடி தெரு, திருவூடல் தெரு, சின்னக்கடை தெரு, மத்தலாங்குளத்தெரு உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு: பேருந்துகளில் பயணம் செய்ய போதிய பயணிகள் இல்லாததால் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற ஊா்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால், பேருந்து நிலையமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பொட்டலங்கள் (பாா்சல்) மட்டுமே வழங்கப்பட்டன. எந்த உணவகத்திலும் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, உணவுப் பொருள்களை பொட்டலம் வாங்கிய தொழிலாளா்கள் பலா் மறைவிடங்களுக்குச் சென்று தரையில் அமா்ந்து சாப்பிட்டனா்.

வழக்கம்போல் இயங்கின: மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஆவின் பாலகங்கள், ஏடிஎம் மையங்கள், தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்துக் கடைகள் வழக்கம்போல இயங்கின.

மற்ற ஊா்களில்...: இதேபோல, கலசப்பாக்கம், ஆரணி, செங்கம், கீழ்பென்னாத்தூா், தானிப்பாடி, வேட்டவலம், போளூா், தண்டராம்பட்டு, வந்தவாசி, கண்ணமங்கலம், செய்யாறு, வெம்பாக்கம் உள்பட மாவட்டம் முழுவதும் 90 சதவீத மக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.