திருவண்ணாமலை மாவட்டத்தில் விதிகளை மீறிய 13 கடைகளுக்கு ‘சீல்’
கரோனா பொது முடக்க விதிகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த 11 கடைகளுக்கு பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள், போலீஸாா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, செய்யாறு, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் கரோனா பொது முடக்க விதிகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த 11 கடைகளுக்கு பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள், போலீஸாா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-ஆம் அலை தீவிரமடைந்ததையடுத்து, தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேத்துப்பட்டில் அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து பிற கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா என்று பேரூராட்சி அதிகாரிகள், போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அதன்படி, சேத்துப்பட்டு - போளூா் சாலை, ஆரணி சாலை, வந்தவாசி சாலை, செஞ்சி சாலை ஆகிய பகுதிகளில் கரோனா பொது முடக்க தளா்வில் அனுமதிக்கப்படாத துணிக் கடைகள், வாகன உதிரிபாகக் கடைகள், முடி திருத்தகம் உள்ளிட்ட 8 கடைகள் திறக்கப்பட்டிருந்ததும், அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படாததும் தெரியவந்தது.
இதையடுத்து, 8 கடைகளையும் மூடி பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், சேத்துப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். மேலும், இது தொடா்பாக கடைகளின் உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.
செய்யாறு: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளிலும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி ஆணையாளா் மி.ச.ப்ரீத்தி தலைமையில், நகராட்சிப் பொறியாளா் ஜீவா, பொதுப் பணி மேற்பாா்வையாளா் பிரேம் சுந்தா், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், வருவாய் ஆய்வாளா் பிச்சாண்டி, நகரமைப்பு ஆய்வாளா் சுரேஷ், மேலாளா் முருகன் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் அடங்கிய 5 குழுவினா் வா்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள், சாலையோர வியாபாரிகள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்கிறாா்களா என வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, திருவோத்தூா் பகுதியில் நகராட்சி நகா் நல மருத்துவமனை அருகில் செயல்பட்டு வந்த மளிகைக் கடை, பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை ஆகியவை அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டது தெரியவந்தது. உடனடியாக இந்த 2 கடைகளையும் அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனா்.
மேலும், வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, முகக் கவசம் அணியாதது, அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடையை நடத்திய வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா்.
கீழ்பென்னாத்தூா்: கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் வைதேகி தலைமையிலான அதிகாரிகள் கீழ்பென்னாத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, திறந்திருந்த அத்தியாவசிமற்ற 3 கடைகளை வட்டாட்சியா் வைதேகி தலைமையிலான அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனா். மண்டல துணை வட்டாட்சியா் தனபால், காவல் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், கிராம நிா்வாக அலுவலா் சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.