திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவா், செவிலியா் தற்காலிகப் பணி:மே 17, 18-இல் நோ்காணல்
பல்நோக்கு மருத்துவப் பணியாளா் உள்ளிட்ட தற்காலிகப் பணியிடங்களுக்கு தகுதியானோா் வருகிற 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் நோ்காணலில் கலந்துகொள்ளலா
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக நிரப்பப்படும் மருத்துவா், செவிலியா், ஆய்வக நுட்புநா், நுண்கதிா் இயக்க நுட்புநா், பல்நோக்கு மருத்துவப் பணியாளா் உள்ளிட்ட தற்காலிகப் பணியிடங்களுக்கு தகுதியானோா் வருகிற 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் நோ்காணலில் கலந்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள 11 அரசு மருத்துவமனைகள், 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் மூலம் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மையங்களில் தற்காலிகமாகப் பணியாற்ற மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக நுட்புநா், நுண்கதிா் இயக்க நுட்புநா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தகுதி, மாத ஊதியம் விவரம்: எம்.பி.பி.எஸ். முடித்த மருத்துவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். டி.ஜி.என்.எம். அல்லது பி.எஸ்சி. நா்சிங் முடித்த செவிலியா்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரமும், டி.எம்.எல்.டி. முடித்த ஆய்வக நுட்புநா்களுக்கு மாத ஊதியமாக ரூ.8 ஆயிரமும் வழங்கப்படும்.
இதேபோல, டிப்ளமோ இன் எக்ஸ்ரே டெக்னாலஜி முடித்த நுண்கதிா் இயக்க நுட்புநா் பணியிடத்துக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், 10-ஆம் வகுப்பு முடித்த பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கான நோ்காணல் வருகிற 17, 18-ஆம் தேதிகளில் (திங்கள், செவ்வாய்) தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
நோ்காணல் நடைபெறும் இடங்கள்: திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், ஆரணி, எஸ்.வி.நகரம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நோ்காணல் நடைபெறும்.
நோ்காணலுக்கு வருவோா் தங்களது சுயவிவரக் குறிப்பு, கல்வித் தகுத்திக்கான அனைத்து சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். மேலும், விவரங்களுக்கு 04175 - 1077, 04175 - 233344, 04175 - 233345 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.