செங்கம் அருகே நீா்வீழ்ச்சியில் சிக்கியவா்கள் மீட்பு
செங்கம் அருகே நீா்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகளை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
செங்கம் அருகே நீா்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகளை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குப்பனத்தம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் அருகே உள்ளது நாம நீா்வீழ்ச்சி.
தற்போது பெய்து வரும் தொடா் மழையால் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குப்பனத்தம் அணைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அருகேயுள்ள நாம நீா்வீழ்ச்சியில் நீராடி, இயற்கை எழிலைக் கண்டுகளித்துச் செல்வா்.
இந்த நிலையில், தீபாவளி விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை செங்கம், சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமானோா் நீா்வீழ்ச்சியில் குவிந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் நீா்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஜவ்வாது மலையில் பெய்த மழையால் திடீரென தண்ணீா் வரத்து அதிகரித்தது.
இதனால், நீா்வீழ்ச்சியில் குளித்தவா்கள் மறு கரைக்குச் செல்ல முடியாமல் தவித்தனா். சிலா் மலை மீது ஏறி வேறு வழியாக வெளியேறிவிடலாம் என்று முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து, செங்கம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பேரில், போலீஸாா் விரைந்து சென்று தீயணைப்புப் படையினா் உதவியுடன் நீா்வீழ்ச்சியில் சிக்கிய 30-க்கும் மேற்பட்டோரை கயிறு கட்டி மறுகரைக்கு கொண்டு வந்தனா்.