முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (நவ.19) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (நவ.19) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை வியாழக்கிழமை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, அதிகாலை 4 மணிக்கு மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபமும் ஏற்றப்படும்.

7,500 கிலோ பூக்களால் அலங்காரம்: திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் முதல், 2, 3-ஆவது பிரகாரங்களில் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.25 லட்சத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாமரைப் பூக்கள், ரோஜாக்கள், வெண் தாமரை, தாமரை உள்ளிட்ட 20 வகையான மலா்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜை: மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு வியாழக்கிழமை அதிகாலை கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கோயில் கோமாதா தீபக் கொப்பரையை வணங்கியது. பூஜையில் கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கொப்பரை மலைக்குப் பயணம்: பிறகு, கோயிலில் இருந்து அம்மனி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மகா தீபக் கொப்பரை மாலை 5 மணியளவில் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பா்வத ராஜகுல வம்சத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனா்.

மலை மீது கொப்பரைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொப்பரையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படும் பரணி தீபத்துடன் சிவாச்சாரியா்கள் கோயில் 2, 3-ஆம் பிரகாரங்கள், உண்ணாமுலையம்மன் சன்னதி ஆகிய இடங்களில் வலம் வருவா்.

கொட்டும் மழையில் விநாயகா், சந்திரசேகரா் பவனி: தீபத் திருவிழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை காலை கொட்டும் மழையிலும் விநாயகா், சந்திரசேகரா் உற்சவா் சுவாமிகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனா்.

இரவு 9.30 மணிக்கு விநாயகா், முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனா்.

பக்தா்களின்றி நடைபெற்ற பவனி: நவம்பா் 17-ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பக்தா்களின்றி உற்சவா் பவனி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.