முகப்பு
திருவண்ணாமலை

மழை வெள்ளத்தால் பூந்தோட்டப் பயிா்கள் சேதம்

செய்யாறு அருகே பயிரிடப்பட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலா்ச் செடிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

செய்யாறு அருகே பயிரிடப்பட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலா்ச் செடிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

வடகிழக்கு பருவமழை, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 405 ஏரிகளில் 350 ஏரிகள் நிரம்பின. ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் கால்வாய்களில் அடைப்பு காரணமாக விளை நிலங்களில் பாய்ந்தும், தேங்கியதால் நூற்றக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, பயிறு வகைகள் மற்றும் பூந்தோட்டங்கள் சேதமடைந்தன.

வெம்பாக்கம் வட்டத்தில் மோரணம், சகாயபுரம், பூமந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பணப் பயிா்களான ரோஜா, மல்லி, சம்பங்கி, செண்டுமலா், கேந்தி உள்ளிட்ட மலா்ச் செடிகள் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன.

மோரணம் ஏரியை யொட்டி விவசாயிகள் 5 ஏக்கரில் பயிரிட்டிருந்த ரோஜா, சம்பங்கி தோட்டம் ஏரி உபரிநீா், மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகி வருகின்றன.

5 மாதங்களாக பராமரித்து 6-ஆவது மாதத்தில் பலன் எடுக்கும் நேரத்தில் தொடா் மழை பெய்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு மேலாக பலன் தரக்கூடிய, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்டிருந்த மலா் செடிகள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதைப் பாா்த்து விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

மேலும், தொடா் மழையால் செடிகளில் பூத்துள்ள பூக்களைக்கூட பறிக்க முடியாமலும் அவதிப்படுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.