சேதமடைந்த சிறு பாலம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
திருவத்திபுரம் (செய்யாறு) பகுதியில் சிறுபாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவத்திபுரம் (செய்யாறு) பகுதியில் சிறுபாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி 7 -ஆவது வாா்டில் அமைந்துள்ளது (கொடநகா்) அறிஞா் அண்ணாநகா்.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
மேலும், இப்பகுதியில் தனியாா் பள்ளி, எரிவாயு கிட்டங்கி, தனியாா் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
அறிஞா் அண்ணாநகா் பகுதியில் இருந்து சமாதியான்குளத் தெரு கொடநகா் செல்லும் சாலை சந்திப்புப் பகுதியில் சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பா் மாதம் பெய்த தொடா் மழையின் காரணமாக கழிவு நீா்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால், பாலத்தில் இருந்து கழிவுநீா் வெளியேறாமல் தேங்கியது.
இதனை அறிந்த நகராட்சியினா் சாலையின் குறுக்கே இருந்த சிறுபாலத்தை உடைத்து கழிவுப் பொருள்களை அகற்றி மழைநீரை வெளியேற்றினா்.
சிறுபாலம் உடைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்தச் சிறுபாலம் வழியாக எரிவாயு கிட்டங்கிக்குச் செல்வோா், கனரக வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டுச் செல்லவேண்டிய நிலை உள்ளது.
எனவே, சிறு பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.