சகோதரர் ராகுல் விரைவில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பார்: முதல்வர் ஸ்டாலின்
அருமை சகோதரர் ராகுல் விரைவில் வேட்பாளரை அறிவிப்பார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி விரைவில் வெளியிடுவார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் திண்டலில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சாலை திண்டல் அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் சா.செந்தில்நாதன், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், பவானி தொகுதி திமுக வேட்பாளர் சேகர் என்ற சந்திரசேகர், அந்தியூர் தொகுதி திமுக வேட்பாளர் சிவபாலன், கோபி திமுக வேட்பாளர் என்.நல்லசிவம், பவானிசாகர் (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பெரியார் பிறந்த மண்ணில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த ஈரோடு மண் பிறந்த மண் மட்டுமல்ல, அண்ணாவும் கலைஞரும் வாழ்ந்த வளர்ந்த மண். ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளரும், அமைச்சரும் சு. முத்துசாமி போட்டியிடுகிறார். நீண்ட நெடிய அரசியல் வரலாறு கொண்டவர். அவர் ஈரோடு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்றுத்தந்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியின் அன்பு சகோதரர் இ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவரது மகன் திருமகன் ஈவேராவும் நின்று வெற்றிப் பெற்ற தொகுதி. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வேட்பாளாரை அன்பு சகோதரர் ராகுல் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த ஈரோடு மாவட்டத்தில் இருந்து 9 பேர் திமுக கூட்டணியில் போட்டியிடுகின்றனர். அவர்களை வெற்றிபெறவைத்து சட்டப்பேரவைக்கு நீங்கள் அனுப்ப வேண்டும்” என்றார்.
முன்னதாக, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் திமுக தலைமை கடந்த மார்ச் 28 ஆம் தேதியே அறிவித்துவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
கடந்த வாரம் தில்லியில் கூடிய காங்கிரஸ் தேர்வுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு வேட்பாளர் பட்டியலை கண்டு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாகவும், சில வேட்பாளர்களை மாற்ற உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. வேட்புமனு தாக்கல் தொடங்கி நான்கு நாள்களாகும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி தொடர்ந்து வருகிறது.
Chief Minister Stalin stated that Rahul Gandhi, the Leader of the Opposition in the Lok Sabha and a senior Congress leader, would soon release the Congress party's list of candidates.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.