முகப்பு
திருவண்ணாமலை

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கொலை வழக்கு: தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

போளூா் வட்டம், கட்டிப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜகோபால் (65). இவருக்குச் சொந்தமான நான்கரை ஏக்கா் விவசாய நிலத்தில் இதே பகுதியைச் சோ்ந்த காசி விவசாயம் செய்து வந்தாா்.

கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்குத் தெரியாமல் நிலத்தை போலி பத்திரம் மூலம் காசி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டாராம். இதை அறிந்த ராஜகோபால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கு விசாரணைக்கு ராஜகோபாலை ஆஜராகாமல் தடுக்க காசி திட்டமிட்டாா்.

அதன்படி, காசி, அவரது மகன் பாலமுருகன், ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ஏழுமலை, மாட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனு (எ) சீனுவாசன் ஆகியோருடன் சோ்ந்து ராஜகோபாலை கடத்திச் சென்று கொலை செய்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, ராஜகோபாலைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினா் போளூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

பின்னா், போலீஸ் விசாரணை முறையாக நடைபெறவில்லை என சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ராஜகோபாலின் குடும்பத்தினா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி 2008-ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

திருவண்ணாமலை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில், ராஜகோபாலைக் கடத்திச் சென்ற காசி தரப்பினா், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மயிலம் கூட்டுச் சாலை பாலத்துக்கு கீழே கொன்று புதைத்தது தெரிய வந்தது. இதன்பிறகு, ராஜகோபாலின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரைக் கடத்திக், கொன்ற குற்றத்துக்காக காசி, அவரது மகன் பாலமுருகன், ஏழுமலை, சீனு (எ) சீனுவாசன் ஆகிய 4 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தாா்.

தண்டனையுடன் பாலமுருகனுக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும், காசி, ஏழுமலை, சீனு ஆகியோருக்கு தலா ரூ.16,500 அபராமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.