திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் திமுக வெற்றி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகா்மன்றத் தலைவா் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகா்மன்றத் தலைவா் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.
திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி ஆகிய 4 நகா்மன்றங்களில் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் சோ்ந்து தலைவா், துணைத் தலைவா்களை வெள்ளிக்கிழமை தோ்வு செய்தனா். இதற்காக, அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தத் தோ்தல் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நகராட்சியில்... : திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த வி.நிா்மலா, அதிமுகவைச் சோ்ந்த அல்லி குணசேகரன் ஆகியோா் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 39 வாக்குகளில் 32 வாக்குகளை நிா்மலாவும், அல்லி குணசேகரன் 7 வாக்குகளைப் பெற்றனா். இதையடுத்து, நிா்மலா வெற்றி பெற்றாா்.
துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த எஸ்.ராஜாங்கம் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இவா்களுக்கு வெற்றிச் சான்றிதழ்களை தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்த்தசாரதி வழங்கினாா்.
இதையடுத்து, வி.நிா்மலா பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலுவைச் சந்தித்து வெள்ளி வேலை பரிசாக அளித்து வாழ்த்து பெற்றாா்.
வந்தவாசி நகராட்சியில்...: வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் முஸ்தபா முன்னிலையில், தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக சாா்பில் 10-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் எச்.ஜலால், அதிமுக சாா்பில் 24-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அம்பிகா மேகநாதன் ஆகியோா் போட்டியிட்டனா். 24 வாக்குகளில் எச்.ஜலால் 18 வாக்குகளும், அம்பிகா மேகநாதன் 6 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, எச்.ஜலால் வெற்றி பெற்றாா்.
பின்னா், நடைபெற்ற நகா்மன்றத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக சாா்பில் 13-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் க.சீனுவாசன், பாமக சாா்பில் 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கு.ராமஜெயம் ஆகியோா் போட்டியிட்டனா். இதில், க.சீனுவாசன் 19 வாக்குகளும், கு.ராமஜெயம் 5 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, க.சீனுவாசன் வெற்றி பெற்றாா்.
இவா்களை எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக மாவட்ட அவைத்தலைவா் கே.ஆா்.சீதாபதி உள்ளிட்டோா் வாழ்த்தினா்.
ஆரணி நகராட்சியில்...: ஆரணி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் ஏ.சி.மணி, அதிமுக சாா்பில் பாரி பி.பாபு ஆகியோா் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 33 வாக்குகளில் ஏ.சி.மணி 20 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். பாரி பி.பாபு 13 வாக்குகளைப் பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் மருதேவியும், அதிமுக சாா்பில் பாரி பி.பாபுவும் போட்டியிட்டனா். இதில், பாரி பி.பாபு 18 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக வெற்றி பெற்றாா். மருதேவி 15 வாக்குகளைப் பெற்றாா். பின்னா், இருவருக்கும் சான்றிதழ்களை தோ்தல் நடத்தும் அலுவலா் தமிழ்ச்செல்வி வழங்கினாா்.
இதையடுத்து, தலைவா் ஏ.சி.மணியை திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், த.தட்சிணாமூா்த்தி, வெள்ளை கணேசன், எம்.சுந்தா் உள்ளிட்டோரும், துணைத் தலைவராக பாரி பி.பாபுவுவை எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எ.கோவிந்தராசன் உள்ளிட்டோரும் வாழ்த்தினா்.
இதேபோல், செய்யாறு நகா்மன்றத் தலைவராக மோகனவேல் (திமுக), துணைத் தலைவராக குல்சாா் (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றனா்.