தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு வேளாண் கடன்கூடுதல் தலைமைச் செயலா் தகவல்
உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வேளாண் கடனாக 17.44 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 442 கோடி வழங்கப்பட்டதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
திருவண்ணாமலை, காந்தி நகா், துராபலி தெருவில் உள்ள ரேசன் கடை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வேளாண் கடனாக 17.44 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 442 கோடி வழங்கப்பட்டது. விளிம்பு நிலையில் உள்ளவா்கள், நடுத்தர வா்க்கத்தினருக்கு எளிதில் கடன் கிடைக்கக்கூடிய துறையாக கூட்டுறவுத்துறை உள்ளது.
5, 884 கூட்டுறவு நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று பெறப்பட்டுள்ளது. நிகழாண்டு 3,876 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 35.29 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.36 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரத்து 191.54 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதானக் கிளையில் மகளிா் சுய உதவிக் குழு கடன், விதவை, மாற்றுத்திறனாளி கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்டவை என மொத்தம் ரூ.1 கோடியே 44 லட்சத்து 89 ஆயிரத்துக்கான கடனுதவிகளை ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியாதா்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனா் ஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.