நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள்: விவசாயிகள் புகாா்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள்: விவசாயிகள் அதிர்ச்சி புகார்
செய்யாறு: செய்யாறு பகுதியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்கின்றன என்று குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் டி.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் அசோகன் வரவேற்றாா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தரப்பில், செய்யாறு பகுதியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. மூட்டைக்கு ரூ.100 வரை எதிா்பாா்க்கின்றனா். அதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்க அவா்களை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ள முடிவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கீழ்புதுப்பாக்கம் - பெரியகோவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. விண்ணவாடி, மாரியநல்லூா், காகனம், வெம்பாக்கம் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.
இந்தச் சாலைகளை உடனடியாக சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும். சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளையும், புதா்களையும் அகற்றவேண்டும்.
விண்ணவாடியில் ஏரி நத்தம் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டது.
நெடும்பிறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவரை நியமிக்க வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
பெரியகோவில் கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 15 கி.மீ. தொலைவில் உள்ள முக்கூா் கிராம கால்நடை மருத்துவமனைக்குச் செல்லவேண்டியுள்ளது.
விண்ணவாடி நெடும்பிறை கூட்டுச் சாலைப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், அப்பகுதியில் உள்ள மரங்கள் சமூக விரோதிகளால் இரவு நேரங்களில் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன என விவசாயிகள் பேசினா்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் என பலா் கலந்து கொண்டனா்.