ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் சாலை மறியல்
ஆத்துரை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி, அத்திட்டப் பணியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போளூா், ஜூலை 25:
சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி, அத்திட்டப் பணியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் ஆத்துரை, காந்திநகா், ஊத்தூரான்புரவடை, மூலபுரவடை, காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 3 வாரங்களாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காலனி மற்றும் ஊா்பொதுமக்கள் ஒரு பகுதியைச் சோ்ந்த 150 நபா்களுக்கு ஜூலை 25-ஆம் தேதி முதல் பணி வழங்கவேண்டும்.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் பணிக்குச் செல்ல பணித்தள பொறுப்பாளா்கள் மகேஸ்வரி, ரேவதி, ஊராட்சி செயலா் பிரபாகரன் ஆகியோரிடம் கேட்டபோது ஊராட்சி மன்றத் தலைவா் கோதை சம்பத், வேலை வழங்கும் பதிவேடு (என்எம்ஆா்) கையெழுத்திடவில்லை (உத்தரவு தரவில்லை).
இதனால் வேலை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிருப்தியடைந்த பணியாளா்கள் வனிதா, ஜெயகாந்தி தலைமையில் தேவிகாபுரம் - அவலூா்பேட்டை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலா் வெங்கடேசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மதிவாணன், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் முரளிதரன் ஆகியோா் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், மாவட்ட அதிகாரிகளிடம் பேசி வெள்ளிக்கிழமை (ஜூலை 26) முதல் பணி வழங்கப்படும் எனத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.