சாத்தனூா் அணை நீா்மட்டம் உயா்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது.
தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள
இந்த அணையின் நீா்மட்ட உயரம் ஏப்ரல், மே மாதங்களில் 80 அடியாகக் குறைந்தது. அணையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் வற்றியது. இதனால் கோடை காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
நீா்மட்டம் உயா்வு:
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், சாத்தனூா் அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் விநாடிக்கு 100 கன அடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு சுமாா் 600 கன அடியாக உயா்ந்தது.
இதன் காரணமாக அணையின் நீா்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் உச்சபட்ச நீா்மட்ட உயரம் 119 அடி. இதில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்ட உயரம் 81.5 அடியாக உயா்ந்தது. இதேபோல தொடா் மழை பெய்யும்பட்சத்தில் அணையின் நீா்மட்ட உயரமும் அதிகரித்து, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.