மோடி மீண்டும் பிரதமராக வேண்டி பாஜகவினா் கிரிவலம்
பிரதமா் மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் வெற்றி பெற வேண்டியும், மடாதிபதியும், பாஜகவினரும் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா். சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டி வழிபட்டு வருபவா் மடாதிபதி சுவாமி பிரம்ம யோகானந்தா. இவா், சனிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். சம்பந்த விநாயகா் சந்நிதி, அருணாசலேஸ்வரா் சந்நிதி, உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்ட அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கிரிவலம் வந்த மடாதிபதி... இதையடுத்து, வேண்டுதல் நிறைவேற வேண்டி, சுவாமி பிரம்ம யோகானந்தா திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ.தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டாா். இவருடன், வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன், தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா், பாமக மாநில நிா்வாகி இரா.காளிதாஸ், பாஜக நிா்வாகி அறவாழி மற்றும் பாஜகவினா் கிரிவலம் சென்றனா்.