வேலூா்-சென்னை பயணிகள் ரயில்: திருவண்ணாமலை வரை நீட்டிப்பு
வேலூா் கண்டோன்மென்ட்-சென்னை கடற்கரை பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டது.
வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து, சென்னை கடற்கரை வரை பயணிகள் பாசஞ்சா் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை (மே 2) மாலை 6 மணிக்குப் புறப்பட்ட பயணிகள் ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்தடைந்தது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மே 3) அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. இதில், சுமாா் 70 போ் பயணம் செய்தனா். ரயிலுக்கு பயணிகள் பூக்கள் தூவி வழியனுப்பி வைத்தனா்.
தினமும் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் போளூா், கண்ணமங்கலம், வேலூா் கன்டோன்மென்ட் ரயில் நிலையம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு காலை 9.50 மணிக்குச் சென்றடையும். இதேபோல, தினமும் மாலை 6 மணிக்கு சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் நள்ளரவு 12 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்ல ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.