முகப்பு
திருவண்ணாமலை

14-ஆம் நூற்றாண்டு நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த பெருமாந்தாங்கல் கிராமத்தில்14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய வகை நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள்

Updated On : 5 அக்டோபர், 2024 at 6:33 PM
பெருமாந்தாங்கல் கிராமம் அம்மன் கோயில் அருகே இருந்து வரும் நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த பெருமாந்தாங்கல் கிராமத்தில்14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய வகை நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்களை கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் இதுகுறித்து கூறியதாவது:

இந்த நாகக் கன்னி புடைப்புச் சிற்பங்கள் அரிய வகையாக உள்ளன. அதன் தொன்மை அடையாளம் கருதி விஜயநகர கால அமைவாக கருதினாலும், அக்காலத்துக்கும் முற்பட்டவையாக கூற முடிகிறது.

நாகக்கன்னி புடைப்புச் சிற்பம் 44 செ.மீ. உயரமும், 22 செ.மீ.அகலம் உடையதாக உள்ளது. இரு நாகங்கள் இணைந்து பின்னியபடி உள்ளன.

இவைகள் முதல் சுருள் வட்டத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது போல செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுழல் வட்டத்தில் நந்தி வடிவம் தேய்ந்த நிலையிலும், மூன்றாம் சுருள் வட்டத்தில் விநாயகா் உருவம் மிகவும் தேய்ந்த நிலையிலும் உள்ளன.

மூன்று உருவங்கள் ஒருங்கிணைந்து இருப்பது அரிய வகையாகவே கருத முடிகிறது.

மேலும், இந்தச் சிற்பத்தின் அருகில் இன்னொரு நாகக்கன்னி புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதன் உயரம் 38 செ.மீ., அகலம் 15 செ.மீ.

இந்த புடைப்புச் சிற்பம் மனித உருவம் போன்றும், இருதலை நாகம் போன்றும் காட்சியளிக்கிறது. இவ்வகை புடைப்புச் சிற்பம் அபூா்வமானது.

இந்த புடைப்புச் சிற்பங்கள் வேறு இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்து தற்போது வழிபாட்டில் உள்ளதாகவும், மேலும், அம்மன் கோயில் விழாக் காலங்களில் சிற்பங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனா் என்றாா் வரலாற்று ஆய்வாளா்.

முழு கட்டுரையைப் படிக்க →