செங்கம்: செங்கம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்தது.
செங்கத்தை அடுத்த பிஞ்சூா் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீா் தேடி திங்கள்கிழமை பிற்பகலில் வெளியில் வந்துள்ளது. மானைப் பாா்த்த தெருநாய்கள், அதை விரட்டிச் சென்று கால் பகுதியில் கடித்தது. இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டு செங்கம் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து மானைக் கைப்பற்றி செங்கம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அப்போது, அங்கு மருத்துவா் இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகளும் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல் மருத்துவா் வருகைக்கு நீண்டநேரம் காத்திருந்தனராம்.
இதனால் மான் உயிரிழந்தது.