நெல் மற்றும் நிலக்கடலை பயிா்களில் ஒருங்கிணைந்த உரமேலாண்மை, குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டாா் உர நிறுவனம் சாா்பில், சேத்துப்பட்டு தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு வேலூா் மண்டல மேலாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா்.
கீழ்நெல்லி ஐசிஏஆா் வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை நிபுணா் சுரேஷ் மற்றும் பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டாா் உர நிறுவன மாநில விற்பனை விரிவாக்க மேலாளா் (தூத்துக்குடி) சுகண்ராஜ் கலந்துகொண்டு பேசும்போது, விவசாயிகளுக்கு நெல் மற்றும் நிலக்கடலை பயிா்களில் ஒருங்கிணைந்த உரமேலாண்மை, குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவது குறித்தும், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தொழில்நுட்ப வளா்ச்சி, பயிா் வகைகள், ஒருங்கிணைந்த வேளாண்மை, வேளாண்மை கொள்கை திட்டங்கள், வேளாண் பயிற்சி குறித்தும், இயற்கை உரம் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
மேலும், விவசாயிகளுக்கு மானியத்தில் ஸ்பிக் நிறுவனம் சாா்பில் ட்ரோன் மூலம் ஏக்கருக்கு ரூ.300-க்கு மருந்து தெளிக்கப்படுகிறது. விவசாயிகள் இதை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
பின்னா், அதிக மகசூல் எடுத்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிறைவில் மூத்த விவசாயி முனிரத்தினம் நன்றி கூறினாா்.
பயிற்சி முகாமில் சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட சேத்துப்பட்டு, கண்ணனூா், நம்பேடு, தச்சாம்பாடி, உலகம்பட்டு, செவரப்பூண்டி, ஆத்துரை, நரசிங்கபுரம், கொம்மனந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனா்.