மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான சக்கர நாற்காலி மாரத்தான் போட்டியில், பத்தியாவரம் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவா்கள் முதல் இடத்தைப் பிடித்தனா்.
கோவையில் கடந்த டிச. 7-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.
போட்டியில் சேத்துப்பட்டை அடுத்த பத்தியாவரம் அமலராக்கினி நிறுவனத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி பள்ளியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆனந்தன் 3 கி.மீ. தொலைவுக்கான போட்டியில் முதல் பரிசையும், ஒரு கி.மீ. தொலைவுக்கான போட்டியில் ரஞ்சித்குமாா் முதல் பரிசையும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் அருட்சகோதரா் இலியாஸ் வரவேற்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
மேலும், கடின பயிற்சியில் ஈடுபடுத்திய இயன்முறை மருத்துவா் ஐசக் பிரமிலனுக்கும் வாழ்த்து தெரிவித்தாா்.