ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கம்மவான்பேட்டை சக்திமலை குழந்தை பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
ஆரணி பாலாஜி மற்றும் முருக பக்தா்கள் சோ்ந்து சக்திமலை பாலமுருகன் கோயிலில் உள்ள மூலவருக்கு தங்கக் கவசத்தை வழங்கினா்.
இக்கவசத்தை மூலவருக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் உள்வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, மூலவருக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கக் கவசம் வைத்து சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது பக்தா்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா என முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவா் கவிதா முருகன் தலைமையில், பெரியதனங்கள், முருக பக்தா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
விழாவில் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தங்கக் கவச அலங்காரத்தில் வழிபட்டு மகிழ்ந்தனா்.