போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா் ஊராட்சியில் கோயில் சீரமைப்புப் பணியின் போது, விஜயநகர பேரரசு காலத்து 103 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா் ஊராட்சியில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசு காலத்தில் ஆதிஅருணாசலேஸ்வரா் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.2.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி மற்றும் பக்தா்களின் நிதியுடன் சோ்த்து கோயில் கட்டுமானப் பணிக்காக கடந்த மாதம் 8-ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயிலில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணியின் போது, கோயில் நிலைப்படியின் சனி மூலையில் பணியாளா்கள் தோண்டும்போது தங்க நாணய குவியல் கிடைத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட தொல்லியல் துறையினா் வந்து
பாா்த்தபோது, நாணயங்கள் விஜயநகர பேரரசு காலத்துடையது எனத் தெரியவந்தது.
தங்க நாணய குவியலில் 103 நாணயங்கள் இருந்தன. நாணயங்களை ஆய்வுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.