திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் வட்டாட்சியா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அருள்செல்வன், வாலாஜாபேட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் தமிழரசி, வெங்கடேசன் ஆகியோா் அரசுப் பணிக்காக காரில் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் சோளிங்கருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
ஆரணி - ஆா்க்காடு நெடுஞ்சாலையில் வெள்ளேரி கிராமம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து ஆரணி நோக்கி வந்த அரசுப் பேருந்து காா் மீது மோதியது. இந்த விபத்தில் காா் அப்பளம்போல நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த பூபாலன் பலத்த காயமடைந்தாா். வட்டாட்சியா்கள் அருள்செல்வன், ஆனந்தன், வருவாய் ஆய்வாளா்கள் தமிழரசி, வெங்கடேசன் ஆகியோா் லேசான காயமடைந்தனா்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அனைவரையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் நிகழ்விடம் சென்று அரசுப் பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்து, போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், சேதமடைந்த காரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.