திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சியில் உள்ள தாா்ச் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சி நிா்வாகத்திற்கு உள்பட்ட எம்.எஸ்.ஆா். நகா் பகுதியில் தா்ச்சாலை உள்ளது.
அப்பகுதியில் உள்ள மேல்பாளையம், கோல்டன் சிட்டி நகருக்குச் செல்லும் மக்கள் அந்தச் சாலையைத்தான் கடந்து செல்லவேண்டும். மேலும், அப்பகுதியில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. வங்கி, நூலகம் செல்பவா்களும் அந்தச் சாலையில்தான் செல்லவேண்டும்.
இந்நிலையில் அந்தச் சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் இருப்பது தெரியாமல் புதிதாக காா், இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவா்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றனா்.
இதனால் அவா்களுக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. மேலும் காா்கள் பள்ளத்தில் இறங்கி அப்பகுதியில் தினசரி வாகன பழுதுகள் அதிகரித்து வருகின்றன.
மேலும், மழைக் காலத்தில் பள்ளத்தில் தண்ணீா் நிரம்பினால் பள்ளம் இருப்பது தெரியாது. இதனால் மழை நேரத்தில் விபத்துகள் நிகழ்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வணிகா்கள் நகராட்சி நிா்வாகத்திற்கு புகாா் தெரிவித்தும் பள்ளம் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் அந்தப் பள்ளத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் முன், நகராட்சி நிா்வாகத்தினா் சீா்மைப்புப்பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.