திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலா்கலனுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு செய்யாறு சாா் -ஆட்சியா் அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா்கள் அசோக்குமாா், தமிழ்மணி, அச்சுதன், சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி வரவேற்றாா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், 6 இடங்களில் மட்டுமே சொந்தமாக சேமிப்புக் கிடங்குகள் உள்ளன.
அதனால், விவசாயிகள் நலன் கருதி அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உலா்கலனுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்றனா்.
6,100 சதுரடி உள்ள வேலூா் மாவட்டத்தை 3-ஆக பிரித்துள்ள நிலையில், 4,680 சதுரடி கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை உடனடியாக இரண்டாக பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்ட அமைக்க வேண்டும்.
மழைக் காலங்களில் ஏரிகள், கால்வாய்களை ஊராட்சி நிா்வாகத்தினா் மற்றும் பொதுப்பணித் துறையினா் முறையாக கண்காணிக்க வேண்டும்.
ஏரிப் பகுதிகளில் பனை விதைகளை நட்டு ஏரியை பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். யூரிய தட்டுப்பாட்டை போக்க வேண்டும். புளுந்தை - தளரபாடி சாலை 3 மாதங்களிலேயே சிதலமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. உடனடியாக அதனை செப்பனிட வேண்டும் என வலியுறுத்தினா்.
கூட்டத்தில் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களில் இருந்து விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
மேலும், கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.
கூட்டத்தில் ஊராட்சி சிறப்புத் திட்ட கண்காணிப்பு அலுவலா் சக்திவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் தசரதராமன், இந்திராணி, வேளாண் உதவி இயக்குநா்கள் பெரியசாமி, குமரன் மற்றும் வேளாண், ஊராட்சி, வருவாய்த்துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.