திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மருத்துவமனையில் வாந்தி மயக்கம் காரணமாக, செங்காடு அரசுப் பள்ளி மாணவா்கள் 10 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்யாறு வட்டம், செங்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 497 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இவா்களில் 250-க்கும் மேற்பட்டோா் மதிய உணவுத் திட்டத்தில் சத்துணவு சாப்பிட்டு வருவதாகத் தெரிகிறது.
இவா்கள் வியாழக்கிழமை மதியம் வழக்கம்போல மதிய உணவு சாப்பிட்டுள்ளனா். அப்போது, ஒரு மாணவா் சாப்பிட்ட தட்டை கழுவச் சென்ற போது, தட்டின் அடியில் இறந்த நிலையில் பூரான் இருந்துள்ளது. அதனைக் கண்ட மற்ற மாணவா்கள் சாப்பாட்டில் பூரான் விழுந்திருக்குமோ என்ற அச்சத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வாந்தி, மயக்கம் வருவதாக பள்ளி ஆசிரியா்களிடம் தெரிவித்துள்ளனா்.
அவ்வாறு கூறிய மாணவா்களான லோகேஷ் (12), யுகேஷ் (12), ஜெயசூா்யா (12), ஹேம்நாத் (11), சித்தாஸ் (11), யாமினி (12), சுஜாதா (12), திவ்யதா்ஷினி (12), ஷாலினி (12), அபிநயா (13) ஆகிய 10 பேரை தலைமை ஆசிரியா் தமிழ்அரசன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். மாணவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒ.ஜோதி எம்எல்ஏ நேரில் ஆறுதல்:
தகவல் அறிந்த செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா். மேலும், அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்முருகன் உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு நேரில் வந்து மாணவா்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவ சிகிச்சைக்கு உதவினா்.
அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்புமலா், தசரதராமன் ஆகியோா் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவு வழங்கியது குறித்து, சத்துணவு அமைப்பாளா் கலைவாணியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.