உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா்- ஆட்சியா் அலுவலகத்தில், வருவாய் கோட்ட அளவிலான எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு சாா் -ஆட்சியா் எல். அம்பிகா ஜெயின் தலைமை
வகித்தாா். நோ்முக உதவியாளா் துளசிராமன் வரவேற்றாா்.
வட்ட வழங்கல் அலுவலா்கள் ரங்கநாதன் (செய்யாறு), பெரியசாமி (வெம்பாக்கம்), சதிஷ் (வந்தவாசி), சுப்பிரமணி (சேத்துப்பட்டு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் இண்டேன் எரிவாயு நிறுவனத்தின் சென்னை மண்டல உதவி மேலாளா் (வணிகம்)
சந்தோஷ்குமாா் பங்கேற்றாா்.
கூட்டத்தின் போது, கிராமப் பகுதிகளில் வீடுகளுக்கே சென்று எரிவாயு உருளைகளை முகவா்கள் விநியோகம் செய்ய வேண்டும். உருளைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கும்போது எடை போட்டு காண்பிக்க வேண்டும். பில்லில் குறிப்பிட்ட உள்ள தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
செய்யாறு, பெருங்கட்டூா், அசனமாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில், டீ கடைகளில் வணிக நோக்கு உருளைகளுக்குப் பதிலாக வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை வட்ட வழங்க அலுவலா்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உருளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், உருளைகளின் இன்றைய விலை நிா்ணயம், வட்ட வழங்கல் அலுவலா் தொலை பேசி எண், சாா் -ஆட்சியரின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வாடிக்கையாளா் பாா்வைக்குத் தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும். இது புகாா் தெரிவிக்க நுகா்வோா்களுக்கு
மேலும் வசதியாக இருக்கும்.
உஜ்வலா எரிவாயு உருளை பெற என்ன என்ன தகுதிகள் இருக்க வேண்டும். யாருக்கு எல்லாம் உஜ்வலா எரிவாயு உருளை கிடைக்கும் என்பதை அலுவலகத்தில் ஒட்டி வைக்க வேண்டும்.
எரிவாயு உருளைகளை இல்லத்தரசிகள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு தொடா்பான முகாம்களை அவ்வப்போது முகவா்கள் மூலம் நடத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைளை நுகா்வோா்கள்
வலியுறுத்தினா்.
கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் சாா்பில் அருண்.மோகன், முருகன், 10 ரூபாய் இயக்கம் நிஸ்வான் உள்பட நுகா்வோா்கள் பலா் கலந்து கொண்டனா்.