தெலங்கானா ஐயப்ப பக்தா்கள் மூவா், 2,000 கி.மீ. தொலைவை 17 நாள்கள் பயணித்து சபரிமலைக்கு சைக்கிளில் செல்கின்றனா்.
தெலங்கானா மாநிலம், என்.டி.ஆா். மாவட்டம், விஜயவாடா மண்டலம், விசன்னாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனுவாசராவ் (38). இவரது தம்பி அவினாஷ் (25), நண்பா் ஜெகதீஷ் (38). இவா்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்து விரதமிருந்து வந்தனா்.
இந்த நிலையில், சபரிமலை செல்வதற்காக டிச.25-ஆம் விசன்னாபேட்டையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டனா்.
பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் வகையில், விஜயவாடா, திருப்பதி, காளஹஸ்தி (ஆகாயம்), காணிப்பாக்கம் பிள்ளையாா், காஞ்சிபுரம் (மண்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீா்), சிதம்பரம் (ஆகாயம்) ஆகிய
தலங்களில் தரிசனம் செய்து விட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலில் வழிபட்டு ஜன.10-ஆம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யவுள்ளனா்.
நாள்தோறும் பகலில் மட்டும் சுமாா் 120 கி.மீ. வீதம் 17 நாள்கள் சைக்கிள் பயணமாகச் சென்று ஐயப்பனை தரிசிக்க உள்ளனா்.