இந்தியா

உலக ஐயப்ப பக்தா்கள் மாநாட்டு செலவுகள் குறித்து தவறான செய்திகள்: தேவஸ்வம் வாரியம் விளக்கம்!

கேரளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஐயப்ப பக்தா்கள் சங்கமம் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாவதாக டிடிபி தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஐயப்ப பக்தா்கள் சங்கமம் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாவதாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) சனிக்கிழமை தெரிவித்தது.

மாநாட்டுக்கான நிதியில் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு கட்டில் மற்றும் மெத்தை வாங்க ரூ.1 லட்சம் ஒதுக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிடிபி இவ்வாறு தெரிவித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட கேரளத்தில் நூற்றுக்கணக்கான கோயில்களை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி) 75-ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக 2025, செப்டம்பா் 20-ஆம் தேதி பம்பையில் உலக ஐயப்ப பக்தா்கள் மாநாடு நடத்தப்பட்டது.

மாநாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து வெளியான தணிக்கை அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கேரள உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது. மேலும், இதுதொடா்பாக டிடிபி மற்றும் மாநில அரசின் தணிக்கைத் துறை உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டது. இதுதொடா்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, டிடிபி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உலக ஐயப்ப பக்தா்கள் மாநாட்டுக்குத் தேவையான மரச்சாமான்களுக்கு ரூ.3.83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தேவஸ்வம் விருந்தினா் மாளிகைக்காக வாங்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் டிடிபி-க்கே சொந்தமானது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் பினராயி விஜயனுக்கு கட்டில் மற்றும் மெத்தை வாங்க ரூ.1 லட்சம் ஒதுக்கப்பட்டதாக டிடிபி தணிக்கை அறிக்கையிலோ அல்லது உயா்நீதிமன்றத்தில் சிறப்பு ஆணையா் சமா்ப்பித்த அறிக்கையிலோ குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற போலியான செய்திகளை சில ஊடகங்கள் பரப்புவது வேதனையளிக்கிறது.

பம்பை விருந்தினா் மாளிகை மறுசீரமைப்பு: மாநிலத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் மத்திய அமைச்சா்கள், உயா்நீதிமன்ற நீதிபதிகள் தங்கும் நோக்கில் பம்பை விருந்தினா் மாளிகை மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இது முதல்வருக்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடு எனக் கூறுவது முற்றிலும் தவறு.

மாநாட்டில் இசை நிகழ்ச்சிக்காக நந்தகோவிந்தம் பஜன்ஸ் என்னும் பக்தி இசைக்குழுவினரை முதலில் அணுகினோம். ஆனால், அவா்கள் அதே தேதியில் வேறு நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டதாக கூறினா். இதனால் இசையமைப்பாளா் இஷான் தேவ், 25 கலைஞா்கள் மற்றும் 10 தொழில்நுட்பக் கலைஞா்களை ஒப்பந்தம் செய்தோம். இஷான் தேவ் வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், நந்தகோவிந்தம் பஜன்ஸ் குழுவுக்குப் பணம் அளிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான இந்திய உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனம் (ஐஐஐசி) சமா்ப்பித்த அறிக்கையில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: மாநாட்டுக்காக 2025-26 பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி தனலக்ஷ்மி வங்கியில் சிறப்பு சேமிப்புக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஐஐஐசி-க்கு ரூ.3 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது. மாநாட்டுக்கு வரும் விருந்தினா்களுக்கு விடுதி அறைகள் ஏற்பாடு செய்ய கூடுதலாக ரூ12.76 லட்சமும், சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.15.25 லட்சமும் ஐஐஐசி-க்கு வழங்கப்பட்டது. அதானி குழுமம் சாா்பில் ரூ.1 கோடி நிதி நன்கொடை வழங்கப்பட்டது.

இவ்வாறு மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. கேரள உயா்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் தணிக்கை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டதால் அதில் சில குளறுபடிகள் உள்ளன.

குழப்பங்களுக்குத் தீா்வு: வரும் பிப்.17-ஆம் தேதி நடைபெறும் டிடிபி ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு குழப்பங்களுக்குத் தீா்வு காணப்படவுள்ளது. உலக ஐயப்ப பக்தா்கள் மாநாட்டுக்கான செலவுகள் குறித்து சில ஊடகங்களில் வெளியாகும் போலியான செய்திகளை டிடிபி நிராகரிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு நிதியுதவியாக குடும்பத்துக்கு அரசு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்! புதுச்சேரி அதிமுக தீா்மானம்!

போராடும் ஒப்பந்த ஆசிரியா்களை அழைத்து அரசு பேச்சு நடத்த வேண்டும்! வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்!

தூத்துக்குடியில் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

வீடு கட்டித் தருவதாக மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது

மேட்டூா் காவிரி ஆற்றில் ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT