முகப்பு
வேலூர்

பணி ஆணை வழங்குவதில் குளறுபடி வாக்களிக்க முடியாத தேர்தல் பணியாளர்கள்

 வேலூர், மே 12: தேர்தல் பணி ஆணை வழங்குவதில் நீடித்த குளறுபடியால், தேர்தல் பணியாளர்கள் பலர் தங்களது வாக்குகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:40 PM
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2023 at 11:41 AM

 வேலூர், மே 12: தேர்தல் பணி ஆணை வழங்குவதில் நீடித்த குளறுபடியால், தேர்தல் பணியாளர்கள் பலர் தங்களது வாக்குகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 வேலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மத்திய அரசுப் பணியாளர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என சுமார் 11,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில், ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கான பணி ஆணை வழங்குவதில் திங்கள்கிழமை குளறுபடி ஏற்பட்டது.

Advertisement

 11 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்க, சுமார் 15 ஆயிரம் ஊழியர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்திருந்தது. இதனால் ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை வேலூர் பாகாயம் தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கூடினர். பலரது பெயர், பட்டியலிலேயே இல்லை. இவர்களை மாவட்ட நிர்வாகத்தினர் காத்திருக்கக் கூறினர்.

 மேலும், திங்கள்கிழமை சிலருக்கு வழங்கப்பட்ட பணி ஆணை ரத்தானது குறித்தும் முறையாக அறிவிக்கவில்லை. இதனால், பலர் செவ்வாய்க்கிழமை வரவில்லை. தகவலறிந்த பின்னர், தாமதமாக வந்து, புதிய பணி ஆணையைப் பெற்றுக் கொண்டனர். இப்பணி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை நீடித்தது.

 இரு நாள்களாக நீடித்துவரும் குழப்பத்தால், தேர்தல் பணியாளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் ஏற்கெனவே பணி ஒதுக்கீடு பெற்றதால், அஞ்சல் வாக்குகளைச் செலுத்திவிட்டனர்.

 ஆனால், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோர் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்த முடியவில்லை.

 தேர்தல் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதி, அந்த அலுவலரின் சொந்த தொகுதியாக இருந்தால், அவர் சான்றிதழ் பெற்று, பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே தனது வாக்குகளைச் செலுத்தலாம். ஆனால், பிற மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவர் நிச்சயமாக அஞ்சல் மூலமே தனது வாக்குகளைச் செலுத்த முடியும்.

 இதற்கான விண்ணப்பப் படிவத்தை முன்கூட்டியே பெற்று, பூர்த்தி செய்து, சீல் வைத்து, ஒப்படைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் முன்பு வரை அரசு அலுவலர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம். ஆனால், அதைப் பூர்த்தி செய்து வழங்கும் விண்ணப்பத்தை தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்பே பெற்றிருக்க வேண்டும்.

 தேர்தல் அலைக்கழிப்பால், 11 ஆயிரம் ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்களது அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பத்தைப் பெற முடியவில்லை.

 அதேபோல, உள்ளூர் தொகுதியிலேயே பணி ஆணை கிடைத்தாலும், அவர் எந்த வாக்குச்சாவடியில் பணியாற்றப் போகிறார்? என்ற உத்தரவு கிடைத்த பிறகே, அவருக்கான வாக்கைப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் மூலம் சான்றிதழ் வழங்க முடியும். ஆனால், பணி ஆணை வழங்குவதில் நீடித்த குழப்பத்தால், அவர் எந்த வாக்குச்சாவடியில் பணியாற்றப் போகிறார் என்ற விவரம், செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குப் பிறகே தெரிந்தது. இதனால், அவரது வாக்கைப் பதிவு செய்ய வாய்ப்பில்லை. அவர் தேர்தலுக்குப் பிறது தனது வாக்கை அஞ்சல் மூலமும் செலுத்த முடியாது.

 தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது வாக்குகளை அதிக எண்ணிக்கையில் செலுத்த முடியாமல் போனது இம்முறையே என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.