49 (ஓ): கேட்பாரில்லை; கேட்டாலும் தெரியவில்லை
வேலூர், மே 13: 49 (ஓ) எனும் விதியின்கீழ், தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்த "வாக்களிக்க விருப்பமில்லை' எனும் உரிமையை மக்களும் பயன்படுத்தவில்லை; அதைப்பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் தெ
வேலூர், மே 13: 49 (ஓ) எனும் விதியின்கீழ், தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்த "வாக்களிக்க விருப்பமில்லை' எனும் உரிமையை மக்களும் பயன்படுத்தவில்லை; அதைப்பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் தெரியவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 50 முதல் 65 சதம் வரையே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. "எந்த வேட்பாளரும் தொகுதிக்குச் செல்லவில்லை. வேட்பாளரைப் பிடிக்கவில்லை. அரசியல் கட்சிகள் எவையும் சரியில்லை. எவருக்கும் வாக்களிக்க விரும்பாததால், வாக்குச்சாவடிக்குச் செல்லவில்லை' எனப் பொதுமக்களிடம் இருந்து பதில் வருகிறது.
முன்பு வாக்குச்சீட்டின் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, வாக்களிக்க விரும்பாத பலரும் தங்கள் வாக்கை செல்லாத ஓட்டுகளாக்கினர். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதற்கான பொத்தான் தனியாக இல்லை.
Advertisement
ஜனநாயக கடமையைத் தட்டிக்கழிக்கும் இவர்களையும், வாக்குச்சாவடிகளுக்கு வரவழைக்கும் நோக்கில், 49 (ஓ) எனும் விதியின்கீழ், "வாக்களிக்க விருப்பமில்லை' எனப் பதிவு செய்யும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு இம்முறை வழங்கியது தேர்தல் ஆணையம்.
ஆனால், அந்த விதிமுறை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் புரியவில்லை; மக்களுக்கும் தெரியவில்லை என்பதே 49 (ஓ) பயன்படுத்தாமைக்குக் காரணமானது.
100க்கு 99 சத வாக்குச்சாவடிகளில் எந்த வாக்காளரும் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை எனக்கூறி வரவில்லை. வந்த அனைத்து வாக்காளர்களுமே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்துச் சென்றனர்.
ஒரு சில இடங்களில் மட்டும், 49 (ஓ) விதியின் கீழ் "தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை' எனக் கூறி வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளருக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வந்த பதில், "49 (ஓ) பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவம் எங்களுக்கு வழங்கப்படவில்லை' என்பதுதான்.
49 (ஓ) என்பது விண்ணப்பப் படிவத்தின் பெயர் கிடையாது. அது தேர்தல் ஆணையத்தின் விதியைக் குறிக்கும் சொல். வாக்களிக்க வருவோரின் பெயர், அடையாள அட்டை எண், பாகம் எண் ஆகியவற்றை 17ஏ எனும் பதிவேட்டில் தேர்தல் அலுவலர் குறிப்பதுண்டு.
வாக்களிக்க விருப்பமில்லை என்பவரது கையில் மை வைத்த பிறகு, அவரது பெயரையும் மற்ற வாக்காளர்களைப் போலவே குறிப்பேட்டில் குறித்து, அதில் கடைசியில் "ரிமார்க்ஸ்' என உள்ள இடத்தில், "வாக்களிக்க விருப்பமில்லை' என்பதை எழுதி வாக்காளர் கையெழுத்திட்டு, வெளியேற வேண்டும். அதை உறுதிப்படுத்த வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலரும் அதன் அருகேயே கையொப்பமிட வேண்டும்.
இந்த நடைமுறை 99 சத தேர்தல் அலுவலர்களுக்குத் தெரியவில்லை. "வாக்களிக்க விருப்பமில்லை' எனும் உரிமையை எப்படி பதிவது? எனக் கேட்டால், "அதைப்பற்றி எங்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் எவ்வித பயிற்சியும் அளிக்கப்படவில்லை' என பதில் வந்தது.