குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூர் ஊராட்சி, வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்தில் முழுமை அடைந்த முதல் ஊராட்சி என்று மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார்.
மேல்ஆலத்தூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் உள்ள 743 ஊராட்சிகளில் 33 ஊராட்சிகள் முழு சுகாதாரம் அடைந்த ஊராட்சிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், முன்னோடியாக மேல் ஆலத்தூர் ஊராட்சியை, சுகாதாரம் முழுமை அடைந்த ஊராட்சி என அறிவிக்கிறேன். இந்த ஊராட்சியில் 693 வீடுகள் உள்ளன. இவற்றில் 257 வீடுகளைத் தவிர மற்ற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தன.
தற்போது அரசு மானியத் திட்டத்தின் கீழ் 257 வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, ஊராட்சியில் யாரும் திறந்த வெளியில் மலம் கழிப்பது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, மேல் ஆலத்தூரை முழு சுகாதாரம் அடைந்த ஊராட்சியாக அறிவிக்கிறேன். திறந்த வெளியில் மலம் கழித்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும், தொற்று நோய்கள் பரவும், கிராமத்தில் தீங்கும், ஒழுக்கமின்மையும் ஏற்படும். இதை உணர்ந்து அனைத்து கிராம மக்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேல் ஆலத்தூரில் இனி யாரும் திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. மீறினால் ஊராட்சி நிர்வாகத்தால் அபராதம் விதிக்கப்படும். இந்த விஷயத்தை மகளிர் சுய உதவிக் குழுக்கள் கண்காணிக்க வேண்டும். நோய்கள் குறைய சாமை, தினை போன்ற சிறுதானிய உணவு வகைகளை மக்கள் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, ஊராட்சியில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அவர் தொடக்கி வைத்த அவர், மழை பெற அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட கூடுதல் இயக்குநர் மனோகர்சிங், உதவி திட்ட அலுவலர் சரவணன், ஊராட்சிகளின் தணிக்கையாளர் செந்தில்வேல், உதவி செயற் பொறியாளர் விக்டர் அமிர்தராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் பி. கோமளா, ஊராட்சித் தலைவர்கள் பட்டு சுமிதா சுரேஷ், கூடநகரம் ராதாபாய் அண்ணாதுரை, வட்டாட்சியர் எஸ்.ஜோதி, புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன், மேல் ஆலத்தூர் ஊராட்சி துணைத் தலைவர் டி.சந்திரா, ஊராட்சி செயலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்எல்ஏ சு.ரவி வேண்டுகோள்...
மழைக் காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்களை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டாலும், கிராம மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும் என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கிராம மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் ஊராட்சி நாகாலம்மன் நகரில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ சு.ரவி பேசியதாவது:
வரும் காலங்களில் மழைக் காலத்தில் குடிநீர் மாசு, தொற்றுநோய்கள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சிகளுக்கு கிருமி நாசினிகளை போதிய அளவு இருப்பு வைக்கவும், நாள்தோறும் குளோரினேஷன் செய்யவும், குழிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாய்களை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணிகளை என்னதான் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டாலும் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தண்ணீர் தேங்காதவாறு, கொசு உற்பத்தி ஆகாதவாறு சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், நாகாலம்மன் நகர் பகுதியில் நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்துக்கு, தணிகைபோளூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரளா பிரவீண்குமார் தலைமை வகித்தார். இதில், ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரவிக்குமார், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முருகன், உறுப்பினர்கள் ரமணா, ஜனார்த்தனன், ரகு, கலைமணி, அருணகிரி, கிருஷ்ணசாமி, ஊராட்சிச் செயலர் சதீஷ்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அம்பரிஷபுரம்: அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரம் ஊராட்சி ஜடேரி காலனியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமலை தலைமை வகித்தார். இதில், ஊராட்சி ஒன்றியத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) செந்தாமரை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லட்சுமி, மன்ற உறுப்பினர்கள் நடேசன், சரவணன், சத்தியகுமார், பாண்டுரங்கன், உஷா, ஊராட்சி செயலர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கிராமத்தில் அரசு, தனியார் இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது, ஊராட்சியின் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கீழ்மின்னல்: ஆற்காடு ஒன்றியம் கீழ்மின்னல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்தி ஜெயந்தியையொட்டி, கீழ்மின்னல் ஊராட்சியின் சிறப்பு கிராமசபைக் கூட்டம் அரசு நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா தண்டாயுதபாணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுமதி செல்வம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கீழ்மின்னல் பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையம் அமைக்க வேண்டும். ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஊரக வளர்ச்சித் துறை ஆய்வாளர் புஷ்பராணி, மருத்துவ அலுவலர் சுரேஷ் பாபுராஜ், கிராம நிர்வாக அலுவலர் தினகரன், சுகாதார ஆய்வாளர் சத்தியநாராயணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பாற்கடல் ஊராட்சி:
வாலாஜா ஒன்றியம், திருப்பாற்கடல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு, அதன் தலைவர் தனஞ்செழியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாலதி ஏழுமலை வரவேற்றார். ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் கே.ஆர்.ராஜேந்திரன் பற்றாளராகக் கலந்து கொண்டார்.
திருப்பாற்கடல் ஊராட்சியில் உள்ள 507 வீடுகளில் 398 வீடுகளில் கழிப்பறை பயன்படுத்தி வந்தனர். கழிப்பறை இல்லாத 109 வீடுகளில் தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.
இதனால் முழு சுகாதார கிராமமாக திருப்பாற்கடல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் அறிவித்தார்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக உதவி இயக்குநர் ஈஸ்வரி (தணிக்கைக் குழு) பங்கேற்றார். முழு சுகாதார கிராமமாக பேணி காப்போம் என கிராம மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆபிரகாம் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார், ஊராட்சி உறுப்பினர்கள் அறிவழகன், சாரதா கார்த்திகேயன், ராஜா, டி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.குமார், ஊராட்சிச் செயலாளர் சங்கர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்கடப்பந்தாங்கல்: தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் எம்.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெ.நரசிம்மன், கிராம நிர்வாக அலுவலர் பி.சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் பி.ராஜேந்திரன், மன்ற உறுப்பினர்கள் எம்.சாந்தி, முருகானந்தம், எஸ்.விமலநாதன், கே.சேகர், பி.கமலக்கண்ணன், வி.சரஸ்வதி, டி.மலர்கொடி, ஆர்.துர்வாசன், ஊராட்சிச் செயலாளர் டி.முத்து, பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வன்னிவேடு ஊராட்சி:
வன்னிவேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குணாளன் முன்னிலை வகித்தார்.
மன்ற உறுப்பினர்கள் லட்சுமி ராஜேந்திரன், சசிகுமார், வனிதா, ரகு, ஊராட்சிச் செயலாளர் சைமன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளிகளில் குடிநீர் விநியோகம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.