பாலாற்றில் விடப்படும் ரசாயனக் கழிவுநீர்
ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியில் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தினர் தோல் தொழிற்சாலை ரசாயன கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்
ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியில் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தினர் தோல் தொழிற்சாலை ரசாயன கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
அதேசமயம், இக்கழிவு நீரானது தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுநீர் இல்லை எனவும், அப்பகுதி பொதுக் கழிவுநீர் என்றும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டையை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் ராணிப்பேட்டை பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ராணிப்பேட்டை, சுற்றுவட்டாரத்தில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீரை ராட்சத குழாய் மூலம் கொண்டுவந்து, ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரித்து நன்னீராக மாற்றி மீண்டும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இது மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களின் பங்களிப்போடு செயல்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை ஆட்டோ நகர், சீனிவாசன்பேட்டை பகுதியில் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சுத்திகரிப்பு நிலையத்துக்கு தோல் தொழிற்சாலைகளில் இருந்து ராட்சத குழாய் மூலம் கழிவுநீரை பெற்று அனுப்பும் மையம் உள்ளது.
அப்பகுதியில் கடந்த சில நாள்களாக சாலை விரிவாக்கப் பணிக்காக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தினர் தோல் தொழிற்சாலை ரசாயனக் கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதாகவும், அதனால் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது.
மேலும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் சோதனைக்கு வராதபடி நிர்வாகத்தினர் பார்த்துக் கொள்வதாகவும், இதன் மூலம் மத்திய, மாநில அரசு வழங்கும் நிதி மானியம் வீணாகி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தினர் கூறுகையில், சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பாலம் கட்டும் இடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, தங்களது மையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறவில்லை எனவும், தங்கள் பணியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது, அது அப்பகுதி பொது கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர்தான் எனவும் விளக்கம் அளித்தனர்.