பொதுமக்கள் சமரச தீர்வு மையங்களை அணுகி பயனடைய வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
பொதுமக்கள் சமரச மையங்களை அணுகி பயனடைய வேண்டும் என வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி தெரிவித்தார்.
பொதுமக்கள் சமரச மையங்களை அணுகி பயனடைய வேண்டும் என வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி தெரிவித்தார்.
வேலூர் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஒருங்கிணைந்த சமரசத் தீர்வு மையத்தின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழா வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.பகலவன், மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ்.அஜிம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சமரச தீர்வு மைய பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி பேசியதாவது:
சென்னை உயர்நீதிமன்றத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த சமரசத் தீர்வு மையங்கள், வழக்கு தரப்பினரிடம் பேசி சுமுகமாக வழக்கை முடித்துக் கொள்ள உதவுகிறது. நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு, வழங்கு தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாள்களிலும், நாள் முழுவதும், சமரச மையம் இயங்கும்.
சமரச மையத்தின் மூலம் வழக்கு தரப்பினர்கள் நேரிடையாகவும், சுமுகமாகவும், தங்களுக்குள் பேசி நிரந்தரத் தீர்வு காண ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
சமரச மையத்தால் இரு தரப்பினருக்கு உடனடியாக பொருளாதார நன்மையும், செலவு நேரம், சிரமம் குறையவும் நல்ல வாய்ப்பாக அமையும். இந்த சமரச மையத்தின் மூலம் வழக்கு சுமுகமாக தீர்க்கப்பட்டால், நீதிமன்றக் கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும். எனவே பொதுமக்கள் தங்களது வழக்குகளில் கால தாமதம் ஏற்படாமல் சமரசம் மூலம் தீர்வு காண சமரச மையங்களை அணுகி பயனடைய வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஆலோசனை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகத்தையும் நடத்தினர். மாவட்ட குடும்பநல நீதிபதி வி.ஆர்.லதா, மாவட்ட தொழிலாளர் நல நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பி.மதுசூதனன், வட்டாட்சியர் பாலாஜி, வழக்குரைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.