அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பாழடைந்த கட்டடத்தில் பரிதவிக்கும் தொழுநோயாளிகள்
அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கான பிரிவு கட்டடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது.
அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கான பிரிவு கட்டடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது.
அதில் இருக்கும் நோயாளிகள் மருத்துவர்களால் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரக்கோணம் அரசினர் மருத்துவமனைக்கு, கடந்த 1972-ஆம் ஆண்டு புதிய உள்நோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. அப்போதே தொழுநோயாளிகளுக்கான பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.
அரக்கோணம், சோளிங்கர் சுற்று வட்டாரத்தில் உள்ள தொழுநோயாளிகள் இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பிரிவு, வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் தொழுநோயாளிகள் பிரிவுக்கான துணை இயக்குநரின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வருகிறது.
இப்பிரிவுக்காக தனியாக செவிலியர், கட்டு கட்டுபவர் என இருவரும், மாவட்டத்தில் ஒரு தொழுநோய் ஆய்வாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால் இன்றைய நிலையில் அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் உள்ள தொழுநோயாளிகள் பிரிவு பழைய கோப்புகளையும், பழைய மரச்சாமான்களையும் வைக்கும் அறையாகவும், மேற்கூரைகளில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் சேதமடைந்த நிலையிலும், அவ்வப்போது நோயாளிகளின் தலையில் விழும் நிலையிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 9 படுக்கைகளே உள்ளதாகவும், இருவர் தரையில் படுத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் கழிப்பறை தூய்மையில்லாமலும், குளியலறையே இல்லாத நிலையும் உள்ளதால், அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது.
இதுகுறித்து நோயாளிகள் கூறியதாவது: இந்த வார்டுக்கான செவிலியர், காலை, மாலை இரு வேளைகளில் வந்து மருந்து, மாத்திரைகளை கொடுத்து விட்டுச் செல்கிறார்.
கட்டுபோடுபவர் தினமும் காலையில் வந்து புண்களுக்கு மருந்துவிட்டு, கட்டு போடுகிறார். தினமும் உணவுகள் சரியான முறையில் அளிக்கப்படுகிறது. அதேசமயம் இந்த பிரிவுக்கு தலைமை மருத்துவரோ, மருத்துவர்களோ இதுநாள் வரை வந்தது இல்லை. இந்த வார்டு இருப்பது குறித்து புதிதாக வந்த மருத்துவர்களுக்கு தெரியாது. மருத்துவர் இருக்கும் இடம் தேடிச் சென்று, உடல் பாதிப்பு குறித்து தெரிவித்தால், எங்களை தொலைவில் நிற்க வைத்தே மருந்து சீட்டை எழுதி தருகிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் டிஸ்சார்ஜ் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.
வேலூர் துணை சுகாதார இயக்குநர்(தொழுநோயாளிகள் பிரிவு) இது நாள் வரை வந்து ஒரு முறை கூட எங்களைப் பார்த்தது இல்லை. அலுவலர்கள் வராததாலேயே எங்களது வார்டு குப்பைகளின் கூடாரமாக்கப்பட்டு விட்டது. மின்விசிறிகள் ஓடாததால், இரவில் கொசுத் தொல்லையால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மழைக் காலங்களில் முழங்கால் அளவு தண்ணீர் வார்டுக்குள் தேங்கி நிற்கும். அதை தாங்களே வெளியேற்றுவோம்.
எங்களது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, மனமுடைந்து, உள்நோயாளிகளாக மாதக்கணக்கில் இங்கு சிகிச்சை பெறும் எங்களுக்கு, நோய் குணமாகும் என்ற தன்னம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. தொழு நோய் தொற்று நோய் அல்ல என வீதிவீதியாக விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவர்களே புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கின்றனர்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதி தேசிய தொழுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அன்றாவது வேலூர் மாவட்ட நிர்வாகம் தொழுநோயாளிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், புதிய ஆடைகள், பிடித்த உணவுகளை அளித்து மருத்துவர்களை நோயாளிகளுடன் நேரில் பேசச் செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும், அவர்கள் வார்டில் உள்ள பழைய கோப்புகள், மரச்சாமான்களை அகற்றி, சுத்தமான கழிப்பறை, குளியலறையை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜீவா இளங்கோ கூறியதாவது:
நீங்கள் இப்போது சொல்லும் போது தான் எனக்கு மருத்துவமனையின் பழைய கோப்புகள், மரச்சாமான்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தொழுநோய் நோயாளிகளை மருத்துவர்கள் நடத்தும் விதம் குறித்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த நோயாளிகளை உள்நோயாளிகளாக அனுமதிக்கும் தினத்தில் அவர்களை நான் பார்ப்பேன். அன்று முதல் பணி மருத்துவர் அவர்களுக்கு அன்றாட சிகிச்சைகளை மேற்கொள்வது வழக்கம். இனி தினமும் அந்த வார்டுக்கு நான் செல்வேன்.
தற்போது வேலூர் மாவட்டத்திலேயே அரக்கோணத்தில் மட்டுமே தொழுநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூட இப்பிரிவு இல்லை. அரக்கோணம் மருத்துவமனை வளாகத்தில் கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருவதால் பல பிரிவுகளுக்கு இடம் இல்லாத நிலை உள்ளது.
இதனால் இந்த கட்டடத்தை பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை. எனவே இந்த பிரிவில் உள்ள நோயாளிகளை காஞ்சிபுரம் மாவட்டம், திருமணியில் உள்ள தொழுநோய் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அரக்கோணத்தில் தொழுநோய் பிரிவு தாற்காலிகமாக மூடப்படும் என்றார்.