டிரம்ப் எல்லை மீறிச் செயல்படுகிறார்! கருத்துக்கணிப்பில் அமெரிக்கர்கள் தகவல்
ஈரானில் தலைவர்கள் கொலை: பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு உடன்பாடில்லை..!
ஈரான் விவகாரத்தில் டிரம்ப் எல்லை மீறிச் செயல்படுவதாகவும் ஈரானில் தலைவர்கள் கொல்லப்பட்டதில் பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு உடன்பாடில்லை என்பதும் சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதேவேளையில், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்ற அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு மூன்றில் இரு பங்கு அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
‘தி அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) - பொது விவகாரங்கள் ஆராய்ச்சிக்கான என்.ஓ.ஆர்.சி.மையம்’ ஆகியவை இணைந்து அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி, 59 சதவீத அமெரிக்கர்கள் ‘ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை’ எல்லை மீறி சென்றிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற அமெரிக்கர்களில் 45 சதவீதத்தினர் அடுத்த சில மாதங்களுக்கு எரிவாயு கிடைக்குமா என்பதைப் பற்றி தீவிர கவலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் 10-இல் 3 பேரும், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களில் 10-இல் 6 பேரும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
டிரம்ப் மறுதேர்தலில் வெற்றி பெற்ற சில நாள்களில் நடைபெற்ற இதேபோன்றதொரு கருத்துக்கணிப்பில், மேற்கண்ட விவகாரத்தில் இந்த விகிதம் 30 சதவீதமாக இருந்த நிலையில், ஈரான் போருக்குப் பின் கூடுதலாக 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
முக்கியமாக, அதிபராக டிரம்ப்பின் செயல்பாட்டை ஆமோதித்து 10-இல் 4 அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் போருக்கு முன்பும், இதே மனநிலையில் அமெரிக்கர்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே ராணுவ அதிகாரத்தை பயன்படுத்தும் டிரம்ப்பின் முடிவுக்கு, அமெரிக்கர்களிடம் பெரும்பான்மையாக எதிர்ப்பலையே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவ பயன்பாட்டில் டிரம்ப் சரியான முடிவுகளை எடுக்கிறாரா? என்பதில் சிறிதளவு நம்பிக்கையே இருப்பதாக அல்லது சுத்தமாக அவர் மீது நம்பிக்கையில்லை என்று பாதிக்குப்பாதி அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு விலை குறைவாக இருத்தல் வேண்டும் என்பதில் ஆளும் குடியரசுக் கட்சி மற்றும் எதிர்தரப்பான ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பும் ஒருங்கே ஒத்த நிலைப்பாட்டில் உள்ளன.
இஸ்ரேலுக்கு ஈரான் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது என்பதற்கு 10-இல் 4 அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரானில் புது அரசு அமைய அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுக்கு மிகக் குறைவான ஆதரவே அந்நாட்டு மக்களிடமிருந்து டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்துள்ளது. 10-இல் 3 பேர் மட்டுமே ஈரானில் அமெரிக்காவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும் அரசு அமைய வேண்டுமென்ற அமெரிக்காவின் நடவடிகைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு உள்பட பல்வேறு அதிகாரப்போக்குடனான டிரம்ப்பின் செயல்பாடுகள், எல்லை மீறிச் சென்றிருப்பதாக 10-இல் 6 அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்புகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக, ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்களிடம் ஆதரவு குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானில் அமெரிக்க வீரர்கள் நேரடியாகச் சென்று சண்டையிடுவதற்கு கடும் எதிர்ப்புப் பதிவாகியுள்ளது. 10-இல் 6 அமெரிக்கர்கள் எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரானில் தலைவர்கள் வான் வழி தாக்குதல்களில் கொல்லப்பட்ட நடவடிக்கைகளுக்கு சுமார் பாதிக்குப்பாதி அமெரிக்கர்களுக்கு உடன்பாடில்லை என்கிறது இந்தக் கருத்துக்கணிப்பு
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை டிரம்ப் எப்படி கையாளுகிறார்? என்பதற்கு, அவரின் செயல்பாடுகளை ஆமோதித்து 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 19-23 வரை அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை ஆராய்ந்து மேற்கண்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.