முகப்பு
வேலூர்

ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது

பேர்ணாம்பட்டு அருகே ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 2 போலி நிருபர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:56 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பேர்ணாம்பட்டு அருகே ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 2 போலி நிருபர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பேர்ணாம்பட்டு டவுன் நியாமத் வீதியைச் சேர்ந்தவர் உருது ஆசிரியர் இம்தியாஸ் அஹமத் (34). குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூரில் உள்ள உருது பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த இவர், 2 வாரங்களுக்கு முன் நடந்த கவுன்சிலிங்கில் மாறுதலாகி, பேர்ணாம்பட்டை அடுத்த எரிகுத்தி மேட்டில் உள்ள உருது பள்ளியில் பணிபுரிந்து 
வருகிறார். 
இந்நிலையில், திங்கள்கிழமை காலை வகுப்பில் இருந்த இம்தியாஸ் அஹமதுவிடம் வந்த 2 பேர் தங்களை தனியார் டிவி சேனலின் நிருபர்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். 
பின்னர், அவர்கள் இம்தியாஸ் அஹமதுவிடம், "மேல்ஆலத்தூர் பள்ளியில் பணியிலிருந்தபோது, அப்பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தங்கள் மீது புகார் வந்துள்ளது. 
அதை நாங்கள் செய்தியாக டிவி, செய்தித் தாள்களில் வெளியிட உள்ளோம். ரூ. 60 ஆயிரம் கொடுத்தால் விட்டு விடுகிறோம்' எனக் கூறி மிரட்டினார்களாம். அவர்களின் புகாருக்கு இம்தியாஸ் அஹமது மறுப்பு தெரிவித்து, பணம் தர மறுத்துள்ளார். தொடர்ந்து 4 மணி நேரமாக அவர்கள் பள்ளியில் அமர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில், பள்ளிக்குச் சென்ற போலீஸார் மேற்கண்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் குடியாத்தம் தரணம்பேட்டையைச் சேர்ந்த ரிஸ்வான்பாபு (30), சந்தப்பேட்டை படேல் சாஹிப் தெருவைச் சேர்ந்த சையத் அர்ஷத் (39) என்பதும்,  இருவரும் போலி நிருபர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.