நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத மத்திய கூட்டுறவு வங்கி கட்டடப் பணி
ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும், வங்கி தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையிலும் அரக்கோணத்தில்
ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும், வங்கி தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையிலும் அரக்கோணத்தில் உள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான புதிய கட்டட கட்டுமானப்பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருக்கும், வங்கி நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி வீணாக வைக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அரக்கோணம் நகர கிளை கடந்த 1958 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் பி.பக்தவதசலு நாயுடுவின் பெருமுயற்சியால் தொடங்கப்பட்டது. அதன் பின் நான்கு ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் இக்கிளை இயங்கி வந்தது. பக்தவத்சலு நாயுடு தனது விடாமுயற்சியால் அரசிடம் நிதி பெற்று அரக்கோணத்தில் வங்கிக்கு சொந்த இடம் வாங்கித் தந்தார். 1962ஆம் ஆண்டில் சோளிங்கர் சாலையில் வங்கிக்கு சொந்தக் கட்டடம் கட்டவைத்து அங்கு வங்கியை மாற்றச் செய்தார்.
இக்கட்டடத்தில் கீழ்த்தளத்தில் வங்கி இயங்கி வந்த நிலையில் முதல் தளத்தில் தற்போதைய அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் கள மேலாளர் அலுவலகமும் செயல்பட்டது. நாளடையில் குருவராஜபேட்டை, பனப்பாக்கம், காவேரிபாக்கம் ஆகிய நகரங்களில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. எனினும், அரக்கோணம் மற்றும் நெமிலி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் இயங்கி வரும் 29 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கள மேலாளர் அலுவலகம் மட்டும் இக்கட்டடத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்தது.
கடந்த 2012 இல் இக்கட்டடம் கட்டி 50 ஆண்டுகள் ஆன நிலையில் கட்டடத்தை வங்கியின் அதிகரித்த அன்றாடச் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு விரிவுபடுத்தவும், கள மேலாளர் அலுவலகத்தை சற்றே விரிவுபடுத்தவும் தேவை ஏற்பட்டது. மேலும் இக்கட்டடத்திலும் ஆங்காங்கே மழைக்காலத்தில் ஒழுகும் நிலையும், கட்டட முன்பகுதியில் மழை வந்தால் தண்ணீர் தேங்கி நின்று அதை வெளியேற்ற முடியாத நிலையும் காணப்பட்டது. மேலும் முன்பக்க சாலை உயர்ந்த காரணத்தால் கட்டடம் பள்ளத்தில் இருக்கும் நிலையும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, வங்கிக் கிளை அலுவலர்கள், உயர் அலுவலர்களுக்கு தொடர்ந்து இப்பிரச்னைகள் குறித்து தெரிவித்த காரணத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு, அரக்கோணத்தில் புதிய கட்டடம் கட்ட வங்கி நிர்வாகக் குழு ரூ.1.87 கோடியை ஒதுக்கியது. இதையடுத்து 26.06.2016-இல் நேருஜி நகர் நான்காவது தெருவில் உள்ள சிறிய கட்டடத்துக்கு தற்காலிகமாக வங்கி மாற்றப்பட்டது. மேலும் அக்கட்டடத்தில் கள மேலாளர் அலுவலகத்திற்கு இடமில்லாததால் அதற்கடுத்த தெருவில் ஒரு தனியார் கட்டடத்திற்கு களமேலாளர் அலுவலகம் மாற்றப்பட்டது.
தற்போது தற்காலிகமாக வங்கி இயங்கும் இடத்தில் போதுமான இடவசதி இல்லை. பணிபுரியும் ஒரு மேலாளர், ஒரு காசாளர், 4 எழுத்தர்கள் அமர வசதியான இடம் இல்லை.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த வாகனங்களில் வந்தால் அவற்றை நிறுத்தவும் வசதி இல்லாத நிலை காணப்படுகிறது. வாகனங்களை பாதுகாப்பின்றி சாலையிலேயே நிறுத்த வேண்டியுள்ளது. வங்கி வளாகத்தில் உள்ள லாக்கர்கள் கூட போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே இருக்கின்றன.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கான கள மேலாளர் அலுவலகங்களுக்கு வரும் சங்கச் செயலாளர்கள் தங்கள் சங்கத்தில் தேங்கும் அதிகப்படியான ரொக்கத்தை கள மேலாளர் அனுமதி பெற்று வங்கியில் ஒப்படைக்க வேண்டியுள்ளது. அவர்கள் கையில் கொண்டு வரும் அதிகப்படியான ரொக்கத்தை அச்சத்துடனே வைத்துக்கொண்டு இரு இடங்களுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்கள் விவசாயக் கடன்களைப் பெறும்போது அந்த ரொக்கத்தை வங்கியில் பெற்றுக்கொண்டு கள மேலாளரிடம் சென்று அனுமதி பெற்றுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கள மேலாளர் அலுவலகமும் வங்கியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க செயலாளர்களின் கோரிக்கையாக வங்கி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கிக் கட்டடத்தை பொதுப் பணித் துறையின் கட்டடக் கோட்ட அலுவலக பொறுப்பில் விட்டுவிட்டனர். மேலும் பொதுப்பணித் துறையினரும் கட்டடத்தை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, அதை ஒரு ஒப்பந்ததாரருக்கு அளித்து பணி உத்தரவு வழங்கப்பட்ட நிலையிலும் கட்டடம் இரண்டு ஆண்டுகளாக இடிக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து கேட்டபோது பெயர் சொல்ல மறுத்த பொதுப்பணித்துறை அலுவலர்கள், வங்கித் தலைமைக்கும் ஒப்பந்ததாரருக்கும் கட்டடம் இடிக்கப்படுவது தொடர்பாக பிரச்னை பேசி தீர்க்கப்படாததால் இந்நிலை நீடிப்பதாக தெரிவித்தனர். வங்கித் தலைமை, கட்டடத்தை இடிப்பது, புதிய கட்டடத்தை கட்டுவது என இரு செயல்களிலும் தலையிடுவதால் பணிகள் தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும் மற்றும் மாநிலக் கூட்டுறவு நிர்வாகமும் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்து கட்டடப் பணியை விரைந்து தொடங்கி புதிய கட்டடத்தில் வங்கிக் கிளையை இயங்கச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.