வேலூர்

தங்கம்மா.. எங்க ஊரு தாயம்மா...!

கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் பார்ப்பதில் இரட்டை சதமடித்து, சப்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார் வேலூர் மாவட்டம், பைரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி தங்கம்மா

எம். அருண்குமார்

நாளை உலக மகளிர் தினம்

கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் பார்ப்பதில் இரட்டை சதமடித்து, சப்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார் வேலூர் மாவட்டம், பைரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி தங்கம்மா.

சுகப் பிரசவங்கள் என்பதே அரிதாகிப் போய், அறுவைச் சிகிச்சை மூலமே (சிசேரியன்) குழந்தை பெற்றுக் கொள்வது இன்றைய காலகட்டத்தில் வழக்கமாகிவிட்டது.

ஆனால் இருநூறுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பாரபட்சமின்றி எவ்வித ஊதியமும் பெறாமல், சுகப் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் நலமுடன் மீட்டெடுத்து சாதனை படைத்து வருகிறார் படிப்பறிவில்லாத சாதாரண பாமரப் பெண்மணி.

தமிழ்நாட்டின் தவப்புதல்வர்களான இரட்டையர்கள் ஆற்காடு ராமசாமி முதலியார் - லட்சுமணசாமி முதலியார் ஆவர். இதில் மருத்துவர் லட்சுமணசாமி முதலியார், இங்கிலாந்து மகாராணி எலிசபெத்துக்கே பிரசவம் பார்த்தவர்.

அவரது பூர்வீக பூமியான வேலூர் மாவட்டத்தில்தான் இருநூறுக்கும் மேற்பட்ட சுகப் பிரசவங்களை பார்த்து சாதனை படைத்திருக்கிறார் இருளர் சமுதாயப் பெண்மணி தங்கம்மா.

ஆம்பூரை அடுத்த மிட்டாளம் ஊராட்சியில் உள்ள மலையடிவாரக் கிராமம் பைரப்பள்ளி. இங்கு இருளர் சமுதாய மக்கள், குறும்பர், அருந்ததியர் என பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இருளர் சமுதாயத்தினரின் குலத்தொழில் காடுகளுக்குச் சென்று கிழங்கு எடுத்தல், தேன் எடுத்தல், எலி பிடித்தல், மூலிகைகள் சேகரித்தல் ஆகியவை. 

'காடாறு மாதம், நாடாறு மாதம்' கதையாக இருளர்கள் வாழ்க்கையின் பாதி நாள்களை காட்டிலேயே கழித்து வந்தவர்கள். கர்ப்பிணியாக காட்டுக்குள், குடும்பத்தினரோடு செல்லும் பெண்கள் கைக் குழந்தையோடு ஊருக்குத் திரும்பி வருவர். மழைக் காலத்தில் பாறைக் குகைகளில் வசித்து, காட்டு ஓடை நீரைக் குடித்து, பசிக்கு தேனையும், கிழங்கு மாவையும், பழங்களையும் தின்று வசிப்பவர்கள். 

பாறைகள், புதர் மறைவில் சக பெண்களால் பிரசவம் பார்க்கப்பட்டும், சில நேரங்களில் பிற பெண்கள் துணை இல்லாமல் குழந்தை பெற்றுக்கொண்டு பாறைக் குகைகளில் சிறிது காலம் தங்கி தாயும், சேயும் நன்கு உடல் நலம் தேறியதும் சில மாதங்களுக்குப் பின்னர் ஊருக்குத் திரும்புவர். விஞ்ஞானத் தொழில்நுட்பம் வளர வளர தங்கள் வாழ்க்கை முறையையும் இவர்கள் படிப்படியாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். 

காட்டுக்குள் பிரசவம் பார்க்கும் முறையை பெரும்பாலான இருளர் சமுதாயப் பெண்கள் நன்கு அறிந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் பைரப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி தங்கம்மா. 

ஊரில் உள்ள கர்ப்பிணிக்கு இடுப்புவலி வந்தால் முதல் தகவல் தங்கம்மாவுக்குதான் போகும். நடு நிசியாக இருந்தால்கூட தயக்கம் காட்டாமல் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று, வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆதரவான வார்த்தைகளைக் கூறி, பிரசவம் பார்ப்பார். குழந்தை பிறந்து, தாயையும், சேயையும் சுத்தம் செய்து, வைக்கோல் படுக்கையில் ஜமுக்காளத்தில் இருவரையும் படுக்க வைத்து விட்டுதான் வீட்டுக்கு கிளம்புவார் தங்கம்மா.

இந்த பிரசவ கால அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட தங்கம்மா கூறியது: 'பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் நாள்கள் நெருங்க நெருங்க ஒருவித பதற்றத்துக்கு உள்ளாவார்கள். வந்திருப்பது இடுப்புவலியா ?, வயிற்று வலியா என்பதைக்கூட அறியாமல், தங்கம்மாவை வரச் சொல்லுங்கள் என குடும்பத்தினரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்வார்கள். வந்திருப்பது சாதாரண வலியாக இருந்தால் அதற்கான ஆலோசனையும், வைத்தியமும் பார்த்து விட்டு வருவேன்.

பிரசவ வலியாக இருந்தால் அதற்கானப் பணிகளில் ஈடுபடுவேன். எந்நேரமும் ஓடியாடி வீட்டு வேலைகளையும், வயல் வேலைகளையும் செய்யும் பெரும்பாலான கர்ப்பிணிகளின் பிரசவம் கொஞ்ச நேரத்தில் இலகுவாய் முடிந்துவிடும். 

எந்த வேலையும் செய்யாமல் காலத்தை கழிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தின் போது 'சண்டி நோவு' வந்து, பாடாய் படுத்தி, நீண்ட நேரம் போராடி குழந்தை பெற வேண்டியிருக்கும். பிரசவ வலியால் துடிக்கும் பெண்களுக்கு முதல் பணியாக முருங்கைக் கீரை, தனியா, பனை வெல்லம் போட்டு கசாயம் வைத்து கொடுப்பேன். 

இடுப்புவலி அதிகமாக அதிகமாக விளக்கெண்ணெய் வாங்கி வரச் சொல்லி, கர்ப்பிணி வயிற்றின் மேலிருந்து, கீழாக கொஞ்சம் கொஞ்சமாக நீவி விடுவேன். அவர்கள் பிரசவ வலியை அறியாமல் இருக்க உற்சாகமூட்டும் வார்த்தைகளைச் சொல்லி, ஆதரவாய் தோளில் சாய்த்து கொள்வேன். படிப்படியாய் வலி அதிகரித்து அடைந்து குழந்தை பிரசவமாவதற்குள் பாடாய் படுத்திவிடுவார்கள். பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடியை பக்குவமாய் அகற்றி சுத்தம் செய்வேன். 

என்னோடு நன்கு குழந்தை பெற்று, அனுபவம் உள்ள பெண்களை உடன் வைத்து கொள்வேன். எங்கள் ஊரில் இரண்டு மணி நேரத்தில் இலகுவாய் பிள்ளை பெற்று கொண்டவர்களும் உண்டு, இரண்டு நாள்கள் வலியோடு போராடி பிள்ளை பெற்றவர்களும் உண்டு. பிறந்தது முதல் குழந்தையாய் இருந்தால் தாயிடம் பால் அருந்துவதற்கு திணறும், சிரமப்படும். உடனே பால் குடிக்காது என்பதால், அந்த வீட்டில் பாலாடை வாங்கி, அதில் தாய்ப் பால் எடுத்து பிறந்த குழந்தைக்கு பக்குவமாய் புகட்டி விடுவேன்.

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் பல சரக்குகடையில் வாங்கி வந்த கஸ்தூரி, குங்குமப்பூ, கோரோஜனம் மூன்றையும் நல்லெண்ணெய்யில் கலந்து கொடுக்க செய்வேன். இதை அந்த குழந்தைக்கு கொடுப்பவர்கள் நல்ல குணாதிசயம் கொண்ட பெண்கள், படித்து திறமைமிக்க ஆண்களை கொண்டு, கொடுக்கச் சொல்வார்.காரணம் அந்த குழந்தை நல்ல குணநலன்களோடு வளர வேண்டும் என்பதால்தான்.

குழந்தை பிறந்த நாள் முதல் தாயையும், குழந்தையையும் காலை, மாலை என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போய் பார்த்துவிட்டு வருவேன். குழந்தை பிறந்த ஏழாம் நாளோ, ஒன்பதாம் நாளோ தாய்க்கும், குழந்தைக்கும் தலைக்கு தண்ணீர் ஊற்றும் சடங்கு நடக்கும். அன்று ஏலக்காய், சீரகம், பட்டை, இலவங்கம் மூலிகைகளை கத்திரிக்காய் போட்டு சாம்பார் செய்து கொடுப்பேன். அந்த கத்திரிக்காய் சாம்பார் பிரசவித்த பெண்ணின் உடல் ஈரம் போக்கி, இதமான உடல் சூட்டுக்கு கொண்டு வரும். 

அவ்வப்போது பிரசவித்த பெண்ணுக்கும், அவள் குடும்பத்தாருக்கும் தேவையான ஆலோசனைகளை சொல்லி விட்டு வருவேன்.

கர்ப்பிணியாய் இருக்கும் போது ஓடியாடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் எங்கள் கிராமத்துப் பெண்களுக்கு பிரசவம் என்பது சுகமாய் இருக்கும். படித்து விட்டு பட்டணத்தில் இருந்து வாழ்க்கைப்பட்டு வரும் பெண்கள், கர்ப்ப காலத்தில் எந்த வேலையும் செய்யாமல் இருந்து, பிரசவ காலத்தில் பெரிய மருத்துவமனைக்கு போய், அதிக பணம் செலவழித்து பிள்ளை பெற்று வருவார்கள். அது அவர்களுக்கு சோகமாய் இருக்கும் என்கிறார் தங்கம்மா.

''நிஜமான வைத்தியர் அவர்''

தங்கம்மாவின் கண்காணிப்பில் குழந்தை பெற்று கொண்டவரான கங்காமணி கூறியது: எங்கள் கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் தங்கம்மாவின் பிரசவ கால உதவியால் பிறந்தவர்கள்தான். கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை தன்னோடு வயல் வேலைக்கு அழைத்துச் செல்வார். அப்போது முதலே எங்களுக்கு கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், உடற்பயிற்சி, குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய முறைகளை தங்கம்மா சொல்லி கொடுப்பார்.

வயல்களில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் களைப்பை போக்க கதை சொல்வது , பாடல்கள் பாடுவது என கர்ப்பிணிகளை உற்சாகமாய் வைத்திருப்பார். எங்கள் குடும்பத்தில் நான் மட்டும் அல்லாமல், என்னுடைய நாத்தனார்கள், நாத்தனார் மகள்கள் என மொத்தம் 12 குழந்தைகள் தங்கம்மாவின் நேரடி கண்காணிப்பில் பிறந்து சென்னையிலும், பெங்களூரிலும் பணி புரிந்து வருகிறார்கள். 

கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதோடு பிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் வரும் தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என எந்தவித தொந்தரவு வந்தாலும் பாட்டி வைத்தியம் செய்வார். தாய், உடன்பிறந்த சகோதரிகள், நாத்தனார்கள் இல்லாத வீட்டில் எல்லாம் பிரசவத்தின் போது தாயாய், சகோதரியாய், சிநேகிதியாய் இருந்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதால் எங்கள் ஊரை சேர்ந்த என்னை போன்ற தாய்மார்களுக்கு 'தங்கம்மா ஒரு தாயம்மா ' என்றார் கங்காமணி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT